Wednesday 11 November 2009

நானும், நீயும், மழையும்...

நேற்று நள்ளிரவில் கலைஞர் தொலைக்காட்சி செய்த பெரும்பிழை தொடர்ந்து ஐம்பது (குறைந்த பட்சம்) மழைப் பாடல்கள் ஒளிபரப்பியது தான். அத்தனைப் பாடல்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் பொழுது மழைப் பெண்ணை பற்றி எழுதாமல் உறக்கம் எங்ஙனம் வரும்? இதோ அந்தக் கவிதை...



வானம் கறுத்து மழை வரத்துவங்கும்
அந்நேரங்களில்
உன் முகமும் கறுத்துப் போகும்...
எனக்கும் உனக்கும் இடையே
இவளொருத்தி வந்துவிட்டாளே
என புகைவாய் உள்ளுக்குள்..
குடையும் மழையங்கிகள்  வீட்டில் இருந்தும்
'எடுத்து வர மறந்து விட்டேனே'
என்பேன் நான்,
உன் சிறிய குடையில்
இருவரும் ஒன்றாய் நடக்கும்
அந்த இனிய தருணங்களுக்காக..

இருவரது முதுகுகளிலும் மழைநீர்
சொட்ட சொட்ட
முன்னந்தலைகளை முட்டிக் கொண்டு
மெல்ல ஊர்ந்து செல்வோம்
சென்னை சாலைகளில்...
காதலர்களை கண்டோ என்னவோ
கார்கள் கூட ஒதுங்கிச் செல்லும்
சேற்றினை வாரி இறைக்காமல்...

மழைப் பெண்ணின் மேல்
நீ கொண்ட கோபத்தை
மேலும் கூட்ட வேண்டுமென்றே
குடைக்கு வெளியில் செல்வேன் நான்.
'அச்சோ! உள்ள வாங்க'
என்று என்னை இழுத்தணைத்து
குடையினுள் கொண்டு வருவாய்...
அந்த சில நேரங்களில் மட்டும்
மழையை மெச்சுவாய் நீ,
கடவுளை மேச்சுவேன் நான்...

சண்டை சமாதனம் ஆயிற்று
என நினைப்பதற்குள்
ஒரு தும்மல்
தும்மி விடுவேன் நான்...
'இந்தா பிடி, என் சாபம்'
என மழையை வைதுவிட்டு
வீட்டினுள் நுழைந்தவுடன்
காபி போட சென்று விடுவாய் நீ...

உடை மாற்றி, தலை துவட்டி
இன்னும் ஈரமாகவே சமையலறையில்
மும்முரமாய் இருக்கும் உன்னை
பின்னால் வந்து
கட்டி அணைப்பேன் நான்!
'அடப் பாவிகளா!
மொத்தத்தில்
உங்கள் காதல் போதைக்கு
நான் ஊறுகாயா?'
என புலம்பல் கேட்கும்
சமையலறை ஜன்னலில் பட்டுத்தெறித்த
மழைத்துளியிடம் இருந்து...