Sunday 27 September 2009

உன்னை போல் ஒருவன் - என் பார்வையில்



குருதி புனல் படத்திற்கு பிறகு பாடல்கள் இல்லாமல் வெளிவந்த ஒரு சிறந்த விறுவிறுப்பான திரை சித்திரம். "Wednesday" என்ற ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக் என்றாலும் கமலஹாசனின் நடிப்பாற்றலையும் அவர் மகளின் இசையையும் காணவே நேற்று திரை அரங்கிற்கு சென்றிருந்தேன்.

கதை கரு ஏற்கனவே தெரிந்தாலும் படம் பார்க்க செல்லும் சில மனிதர்களில் நானும் ஒருவன். திரைக்கதை அமைக்கப் பாத்திருக்கும் விதம் அறிய சென்றிருந்தேன். மோகன்லால் என்ற மிகச் சிறந்த நடிகரை தமிழ் படங்களில் அதிகம் பார்க்கும் பாக்கியம் நம் தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் என்னுள்ளே எழத் தான் செய்தது. இனி நாம் கதை களத்திற்கு வருவோம்...

ஒரு சாதாரண மனிதனின் கோபம் எங்கு சென்று முடியும் என்பது தான் கதை. போலீஸ் கமிஷனர்'க்கு போன் செய்து நகரத்தின் முக்கியமான பல பகுதிகளில் வெடிகுண்டு வைத்திருக்கிறேன் என்று சொல்லுவதில் ஆரம்பித்து இறுதியில் அனைத்தையும் முடித்துவிட்டு காய்கறி கூடையுடன் அந்த கட்டிடத்தில் இருந்து இறங்கிச் செல்லும் கடைசி காட்சி வரை கமலின் நடிப்பு தூக்கல். மோகன்லால்'ஐ பற்றி கேட்கவே வேண்டாம். போலீஸ் கமிஷனர்'ஆக கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறார். ஆனால் அரங்கத்தில் பிரபு அந்த வேடத்தை ஏற்று நடித்திருக்கலாம் என்ற கருத்துக்கள் செவியில் விழுவதை தவிர்க்க முடியவில்லை.

'கேரளா மட்டுமில்லை இதுவும் என் நாடு தான்' என தமிழ்நாட்டைப் பற்றி மோகன்லால் குறிப்பிடும் இடம் அருமை. Aarif'ஆக வரும் இளம் காவல் அதிகாரி முகத்தை இறுக்கமாக வைத்திருக்க ஏனோ என் நேரமும் Chewing Gum மென்றபடி கொண்டிருக்கிறார். இவரை ஏதோ ஒரு பனியன் விளம்பரத்தில் பாரத்ததாய் ஞாபகம். Police Informer'இன் வீட்டில் அவரின் தங்கையிடம் சில்மிஷம் செய்யும் அதிகாரியை புரட்டி எடுக்கும் காட்சி அருமை. Sethu'வாக வரும் அதிகாரியும் நடிப்பில் அருமை. லஞ்சம் வாங்கும் அதிகாரியின் பையில் இருந்து 100 ரூபாயை bike'காரரிடம் அளிக்க வைக்கும் இடத்தில் பளிச்சிடுகிறார்.  ஊருக்கு செல்லும் தன் மனைவி ஒருபுறம், தீவிரவாதிகளை கையாள வேண்டிய சூழல் மறுபுறம் என கதாபாத்திரம் வடிவமைக்கபட்டிருப்பது அருமையிலும் அருமை.

தன் flash back'ஐ சொல்லும் பொழுது 'கருவருத்தல்' என்னும் வார்த்தையின் பொருளை தான் உணர்ந்த இடத்தை கமலஹாசன் கூறும் தருணங்களில், அப்படி செய்த கயவர்களை நட்டநடு சாலையில் நிற்க வைத்து சுடவேண்டும் என்னும் வேகம் நம்மிடையே எழுகிறது. கனமான காரணம் தான் அவர் இவ்வாறு மாறுவதற்கு.

பெண் reporter என்றால் புகைப் பிடிக்க வேண்டும், Computer Geek என்றால் தலையை படியவாராமல் அலைய வேண்டும் என்ற Kollywood'இன் எண்ணம் மாற வேண்டும். ராகவன் மாறார் - இனிமையான மலையாள பெயர். நாயர் என்ற பெயர் இல்லாமல் ஒரு மலையாள character வைத்ததில் மிக்க மகிழ்ச்சி.

Shruthi Hassan'இன் இசை ஒரு த்ரில்லர் படத்திற்கு எப்படி அமைய வேண்டுமோ அப்படி இருக்கிறது. பாடல்கள் இருந்திருந்தால் அவரின் திறமையை மேலும் அறிய வாய்ப்பு அமைந்திருக்கும். பார்ப்போம். மீண்டும் ஒரு படத்திற்கு இசை அமைக்காமலா போய் விடுவார்.

சென்னை நகரத்தையும் நகரின் பல பகுதிகளையும் 'இவ்வளவு அழகா நம் நகரம்' என எண்ணும் வகையில் ஒளிப்பதிவு செய்தவர்க்கு பாராட்டுக்கள். 'நீங்க தான் எல்லாத்தையும் காட்றீங்களே' என தொலைக்காட்சியை கமல் சாடும் சுருக் வசனங்கள் அருமை. வசனகர்த்தாவுக்கு நன்றி.

வெகு நாட்கள் கழித்து திரை அரங்கிற்கு சென்று அமைதியாய் பார்த்த படம். குடும்பத்துடன் சென்று பார்க்க கூடிய சித்திரம். RaajKamal Films International'க்கும் UTV Motion Pictures'க்கும் பாராட்டுக்கள்.

Monday 21 September 2009

மனதுக்குள் மத்தாப்பு



இந்த இரண்டு நாட்கள் என் வாழ்வின் மறக்க முடியாத நாட்கள். இரண்டு மாதம் கழித்து என் தந்தையை நேரில் கண்டேன். என்னைப் பார்க்க விழுப்புரத்தில் இருந்து புது டெல்லிக்கு புறப்பட்டு வந்திருந்தார்.

இரண்டு நாட்கள இரயில் பயணம் முடிந்து, இரண்டு நாட்கள் என்னுடன் தங்கி விட்டு இன்று மீண்டும் இரயில் ஏறி சென்று விட்டார். என் தந்தைக்கு சமையல் செய்யும் பாக்கியம் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. முன்பு நான் பல முறை அவருக்கு  Maggi சமைத்து கொடுத்துள்ளேன். அவருக்கு பிடிக்காவிட்டாலும் ரசித்து சாப்பிடுவார். ஆனால் இது தான் முதல் முறை அவருக்கு பிடித்த காரக் குழம்பு, மீன் குழம்பு என விதவிதமாக நான் சமையல் செய்தது. Of course, என் அறை நண்பரின் உதவியுடன் தான்...

தீபாவளிக்கு ஊருக்கு சென்றவுடன் என் அம்மாவுக்கும் தங்கைக்கும் ஒரு முறை இது போல் சமையல் செய்து போட வேண்டும். என் நெடுநாள் ஆசையில் ஒன்று அன்று நிறைவேறி விடும்.

நேற்று நானும் அப்பாவும் ஷாப்பிங் போனோம். மிகப் பெரிய Shopping Mall'களை பார்த்தறியாதவர். நான் Food coupons'ஐ தண்ணி போல செலவு செய்வதை பார்த்து பிரமித்து இருக்கலாம். ஆனால் தன் பிள்ளை சம்பாரித்து செலவு செய்வதை பார்த்து கண்டிப்பாய் பூரித்து இருப்பார்.

நான் நிரம்ப மகிழ்ச்சியாய் இருப்பதற்கு முக்கியமான காரணம் மேலும் ஒன்று உள்ளது. இந்த வலைப் பதிவில் உள்ள என் கவிதைகளை தந்தையிடம் காண்பித்தேன். நான் கல்லூரி சமயத்தில் எழுதிய கவிதைகளை எனக்குத் தெரியாமல் படித்ததையும், என்னுள்ளே இப்படி ஒரு ஆற்றல் உண்டு என்பதை எண்ணி வியந்ததையும் சொன்னார். இத்தனைக்கும் இப்பொழுது எழுதும் அளவுக்கு சுமாராக கூட அப்பொழுது எழுதவில்லை. என்ன இருந்தாலும் தன் மகனை விட்டுக் கொடுப்பாரா? அதான் அப்படி கூறினார் போலும்.

ஆனால் இன்று படித்து விட்டு எதுவுமே சொல்லவில்லையே. ஒருவேளை  அம்மாவிடம் போய் சொல்லுவாரோ? அம்மாவிடம் தனிமையில் ஒரு நாள் இதைப் பற்றி கேட்போம். சப்பைக் கவிதைக்கே சூப்பர் என்றவர், என் நண்பர்கள் பாராட்டும் அளவுக்கு இருக்கும் இந்த கவிதைகளை பற்றி பேசாமலா இருப்பார்...

முன்பு கல்லூரி சமயத்தில் படிப்பில் கவனம் சிதறிவிடும் என்று இந்த மாதிரி கவிதைகளைப் பற்றியும் நான் எழுதிய இரண்டு சிறு கதைகளைப் பற்றி அறிந்தும் எந்தக் கருத்தும் கூறவில்லை. "இதெல்லாம் வேணாண்டா. ஒழுங்கா படிக்கற வேலைய பாரு" என்று மட்டும் கூறினார். இன்று அமைதியாய் அவர் இருந்ததே மிகப் பெரிய பாராட்டு. எனினும், அவர் கருத்துக்களை கேட்க ஆவலுடன் இருக்கிறேன் நான்...

பின் குறிப்பு: மேலே இருக்கும் புகைப்படம் என் தங்கையின் நிச்சையதார்த்தின் பொழுது எடுத்தது. A very proud moment for me.

Wednesday 16 September 2009

என் மாற்றங்கள்

மூன்று வருடங்களுக்கு முன்பு
மழை வெள்ளத்தில் மூழ்கியிருந்த
சோழிங்கநல்லூர் சாலைகளில்,
பள்ளிச் சிறுவர்களைப் போல்
முழுக்கால் சட்டையை அரைக்கால் சட்டையாய்
மடித்து விட்டுக் கொண்டு
ஒரு கையில் காலணிகளையும்
வான் மழை தவிர்க்கவும்
வாகனங்களின் சக்கரங்களில்
பட்டுத் தெறிக்கும்
தரை மழையை தடுக்கவும்
மறு கையில்
ஒரு கறுப்புக் குடையுடன்
அலுவலகம் சென்ற
அந்த நாட்கள்...

ஒரு வருடத்திற்கு முன்பு
செவியில் இளையராஜாவும் Eminem'ஐயும்
கசிய விட்டுக்கொண்டு
பெய்யும் சிறு தூரலை பொருட்படுத்தாமல்
bike'இல் அலுவலகம் பரந்த அந்த காலங்கள்...

இன்று குர்காவுன் சாலைகளில்
குளுகுளு ஊர்தியின் உள்ளிருந்து கொண்டு
வெளியே
மழைக்கு பயந்து
ஓடிக் கொண்டிருக்கும்
மென்பொருள் வல்லுனர்களை
ஏளனமாய் பார்க்கும்
இந்த காலங்கள்...

நாளை இதே
குர்காவுன் சாலைகளில்
பழையபடி
ஒரு கையில் காலனிகளுடனும்
மறு கையில் குடையுடனும்
செல்லப் போகும்
அந்த காலங்கள்...

காலங்கள் பல மாறிவிட்டாலும்
மாரியைப் போல் மாறாதது
என் மாற்றங்களும்
மழைப் பெண்ணின் மேல் என் மோகமும்...

இப்படியும் ஒரு சங்கடம்




எவ்வளவோ எழுதுகிறாய்,
என்னைப் பற்றியும் எழுதேன்...
ஒரு ஐந்தரை அடி பூ
என்னைப் பார்த்து கேட்டது...
உலகில் இருப்பவைகளையும்
தினமும் நடக்கும் சம்பவங்களையும்
அழகாய் விவரிப்பதே கவிதைகள்...
ஆனால்
அழகை இன்னும் அழகாய் விவரிப்பது எப்படி?
இதை எப்படி புரிய வைப்பேன் அவளுக்கு?
அடடா,
இப்படியும் ஒரு சங்கடமா எனக்கு,
குழப்பத்துடன் நான்...

Thursday 10 September 2009

நவரசங்கள்

நவரசங்கள் என நாட்டிய கலைகளில் கூறப்படுபவை இவைகள்

காதல்
இன்பம்
துன்பம்
கோபம்
கருணை
அருவருப்பு
பயம்
வீரம்
ஆச்சர்யம்

இந்த நவரசங்களும் அமையுமாறு ஒரு கவிதை உருவானால் எப்படி இருக்கும்? இது தான் என் அடுத்து கிறுக்கலின் கரு...

நம்மைப் பற்றி எழுதுவோம்...


கனமழை பெய்து ஓய்ந்திருந்த சாலையில்
சீறிச் செல்லும் ஊர்தியின்
ஜன்னல் இறக்கி
தவழ்ந்து வந்த தென்றலை
தழுவும் இத்தருணம்,
என் காதலை
கவிதையால் சொல்லும் தருணம்...

எப்பொழுது வேண்டுமானாலும் வருவேனென
இடியுடன் உரைக்கும் மழை மேகங்கள்,
மண்வாசனையுடன் கலந்த இளந்தென்றல்,
என் எண்ணங்கள் போல்
பின்னோக்கி வேகமாய் செல்லும்
சாலையோர கட்டிடங்கள்,
காற்றில் அலைபாயும்
என் முன் தலைமுடி,
சிறு காது மடல்களிலும்
விழி மூடிய இமைகளிலும்
பட்டுத் தெறிக்கும் சிறு தூறல்...
உலகை ரசித்துக் கொண்டே
உன்னைப் பற்றி எழுத
வார்த்தைகள் தேடும் படலம்
ஒருபுறம் இருக்க...
இயற்கையின் அழகில் மூழ்கும்
முயற்சி மறுபுறம் இருக்க,
சட சடவென்று முகத்தில் அறைந்தது
சாரலாய் மாறியிருந்த மாரியின் தூறல்...

ஜன்னலை ஏற்றிவிட்டு
நினைத்துப் பார்க்கிறேன்...
உன்னைப் பற்றி சில வார்த்தைகள்
எழுத எத்தனித்திருந்த நான்
என்னைப் பற்றியே
பல வார்த்தைகள் எழுதியிருந்தேன்...

இதைப் பார்த்து
நீ கோபித்தாலும்
சமாதானம் செய்ய
வழியறிவேன் நான்...

என்னைப் பற்றி எழுதினாலும்
உன்னைப் பற்றி எழுதினாலும்
இரண்டுமே
நம்மைப் பற்றியது தானே
என் கண்ணே....

இது போலவே இன்னும்
நம்மைப் பற்றி
பல கிறுக்கல்கள் எழுதுவேன் நான்...
மன்னிக்கவும்,
நம்மைப் பற்றி
பல கிறுக்கல்கள் எழுதுவோம் நாம்...

Saturday 5 September 2009

என் அறை நண்பன்

நண்பன் ஊருக்கு சென்ற 
இரண்டு நாட்கள் கழித்து 
பசி வயிற்றுடன் 
இரண்டரை மணிக்கு அலுவலகம் செல்லும் 
அந்த பொழுதில் உணர்ந்தேன் 
என் அறை நண்பனின் 
அருமை சமையலையும் 
அவனது அக்கறையையும்...

அந்த இரவு நேரங்கள்


வெள்ளிக்கிழமை வேலைமுடிந்து
அலுவலக நண்பர்கள் அனைவரும்
தத்தம் வீடுகளுக்கு சென்றுவிட,
இரண்டு மணிநேரம்
தனிமையில் அதிகவேலை பார்த்துவிட்டு
மொழி புரியாத ஓட்டுனருடன்
உரையாடல் தவிர்த்து
அலுவலக ஊர்தியில்
வீடு திரும்பும்
அந்த இரவு நேரங்களில்,
இதயத்திற்கும் மூளைக்கும்
போராட்டம் நடந்து
கண்களில் நீர்கோர்க்கும்
அதே இரவு நேரங்களில்
உணர முடிகிறது,
சில ஆயிரம் மைல்கள்
பிரிந்து வந்துவிட்ட
நண்பர்களின் நட்பையும்
பெற்றோர்களின் பாசத்தையும்...