Friday 24 December 2010

நானும் உன்னை...


என் இதய வாசலில்
உன் காலடித்தடம் பதிய
ஊமைத் தவம் இருந்தேன்...
உண்மை உணர்ந்து
நீ என்னுள் நுழைந்த நேரம்
என் நிலை மறந்து கிடந்தேன்...
காற்றில் பறப்பதாயும் கடலில் மிதப்பதாயும்
மகிழ்ச்சியில் திளைத்தேன்...
உன் வார்த்தைகளின் புண்ணியத்தில்
அடங்கி இருந்த என் இதயம
சட்டென விடுதலைப்பெற்று வேகமாய் துடிக்கின்றது...
ஓடும் குருதி சடுதியில் வேகம்பெற
என் உடலெங்கும் வியர்க்க
மனம் நிறையும் மகிழ்ச்சியுடன்
உலர்ந்து போன என்னுதடுகள் வழியே
உரைத்தனன் நான்
"நானும் உன்னை..."

Tuesday 3 August 2010

உறங்கும் அழகு


பஞ்சணையில் முகம் புதைத்து 
படுத்திருக்கும் உன்னை 
பார்த்தவாறே அமர்ந்திருக்கிறேன் 
எதிரே நான்...

உன்னை கடிக்க வந்த கொசுவை
வேகமாய் விரட்டிவிட,
பட்டென அது பறந்து சென்று
பிறிதொரு நாழிகையில்
என் கையில் அமர்கிறது...
அதன் வயிற்றுப் பசிக்கு நானும்
என் காதல் பசிக்கு 
நீயும் உணவாக 
மெல்ல நகர்கிறது நிமிடங்கள்...

பாதம் வரை உன் புடவையை 
இழுத்து விடும் சாக்கில்
அங்கே ஓர் முத்தம் பதிக்கிறேன் நான்
ஒரு செல்ல சிணுங்கல் உன்னிடம் வெளிப்பட
மெட்டி ஒலி மயக்கத்தில் இருந்து விடுபட்டு
என் இடம் சென்று அமர்கிறேன்

ஆயிரம் கவிதைகள் ஓர் உருவாய்
நூறு மயில்கள் ஓர் எழிலாய்
உறங்கும் உன்னை விடுத்து
அந்த ஒற்றை நிலவை
எழுதத் துணிந்த என்னை கண்டு 
சிரிக்கிறது விதி,
எழுத தொடுத்த வரிகளை மறந்து 
உன்னழகை பருகிக்கொண்டு 
அமர்திருக்கிறேன் நான்,
வெட்கி மறைகிறது
மேகத்தினூடே நிலா!

Tuesday 27 July 2010

ஒரு ஆண் தாயின் தாலாட்டு...


ஆராரோ ஆரீரரோ 
பூமகளே கண்ணுறங்கு,
வானத்து விண்விளக்கே
விழிமூடி நீயுறங்கு...

சூரியனார் வம்சமடி
சிணுங்காம கண்ணுறங்கு,
சோழர்குல மாணிக்கமே
சீக்கிரமா நீயுறங்கு...

நிலாவத் தான் புடிச்சிவர
உங்க அப்பாரு போயிருக்கார்,
விடியும் முன்னே நீயுறங்க 
வந்திடுமே நிலவும் இங்கே...

(ஆராரோ ஆரீரரோ)

நாடாள பிறந்தவளே
நிம்மதியா கண்ணுறங்கு,
பாராளும் காலம் வரும் 
பகட்டில்லாம நீயுறங்கு...

வானவில்லின் தேர் ஏறி
வானத்தையும் வென்றிடலாம்,
இன்று மட்டும் கண்ணுறங்க
நாளை முதல் உன் ஆட்சியடி...

(ஆராரோ ஆரீரரோ)

நேத்தைக்கு தான் இம்சை பண்ண
இன்னைக்குமா அதே கதை,
முடியலடி உங்கம்மாவுக்கு 
தூங்கி போடா என் பட்டுகுட்டி...

நாள் பூரா வேலைசெஞ்சு 
ஒடுங்கி போய் வந்திருக்கேன் ,
இதுக்கு மேலையும் படுத்தாம 
தூங்கி போடி என் செல்லகண்ணு...

(ஆராரோ ஆரீரரோ)

Tuesday 20 July 2010

பரிமாறிய என் இதயம்



என் இமைகள் தேடி நீ கொடுத்த
முத்தச் சத்தம் ஓய்ந்திருக்கவில்லை,
உன் இதழ்கள் தேடி நான் பதித்த
முத்த ஈரம் காய்ந்திருக்கவில்லை,
ஆனால் நேற்று பரிமாறிக் கொண்ட 
நம் இதயத்தில் ஒன்று மட்டும்
ஏனோ சத்தம் இல்லாமல் நின்று விட்டிருந்தது.


காரணம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்
இந்த கயவன் செய்த செயலை அறியாமல்...
பழுதாய் போன 
இந்த கயவனின் இதயத்தை 
காதல் கடனாய் பெற்றாய்,
அது கஷ்டப்பட்டு துடித்து
இன்று ஒரு வழியாய் நின்றும் விட்டது
உன் இதயம் மட்டும்
என்னுளே இன்னும் பத்திரமாய்...

நான் வாழும் சொற்ப காலமும்
நினைவில் கொள்வேன்
பறித்துக் கொண்ட 
உன் இதயத்தின் பாவத்தையும்
பறி கொடுத்த
என் இதயத்தின் தவறையும்....

Monday 5 July 2010

என் காதலியின் காதலன்



நீ விரும்பிய பாடல்களை
தேடி பிடித்து கேட்டிருக்கிறேன்,
நீ விரும்பிய படங்களை
ஆர்வமாய் பார்த்திருக்கிறேன்.
நீ சிரித்த 
நகைச்சுவைக்கு சிரித்து,
நீ அழுத
நேரங்களில் அழுதிருக்கிறேன்...

உன் ரசனையும்
என் ரசனையும்
ஒன்றென உனக்கு
புரிய வைக்க போராடியிருக்கிறேன்.
உனக்கு பிடித்தவனை
நீ கண்ட நாள் வரை...

என் போராட்டம்
உனக்கு புரியாமலே போய்விட்டது.
குற்றஞ் சொல்லவில்லை நான்,
குமுறிக் கொள்கிறேன்
மனதினுள்ளே...

உனக்கானவன் நானில்லை
என்றறிய மனம் மறுக்கிறது,
உனக்கு பிடித்தவனை
ஏற்க முடியாமல் தவிக்கிறது.
முதல் தடவையாய்
நம் ரசனை வேறுபடுகிறது.

என்னை வைக்க வேண்டிய இடத்தில்
இன்னொருவனை வைக்கிறேன்
புரிந்து கொள்ளடா
என் மட மனமே!!!
என் காதலியின் காதலன்
எனக்கு நண்பன்.
கடைசி வரை
எங்களின் ரசனை
ஒன்றாகவே இருக்கட்டும்...

Monday 21 June 2010

ராவணன் - என் பார்வையில்


விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ப்ரித்விராஜ், பிரபு, கார்த்திக், ரஞ்சிதா, ப்ரியாமணி என பெரிய நட்சத்திர பட்டாளத்தை களமிறக்கி சிரத்தையுடன் மணிரத்னம் இழைத்திருக்கும் சித்திரம் தான் ராவணன். இந்த வருடத்தில் மிக பெரிதாக எதிர்பார்க்கப் பட்ட படங்களில் ஒன்று. எல்லாரும் எதிர்பார்த்தது போல மிகவும் பழகிய ஒரு கதை களம். A.R.ரஹ்மானின் சிறந்த இசை விருந்துடன் ஒரு திரை காவியம்.

எடுத்த எடுப்பிலேயே Police வண்டிகளை தாக்குதல், கூடாரத்தை அழித்தல், ஆள் கடத்தல் என படம் வேகம் எடுக்கிறது. தலையும் புரியாமல் வாலும் புரியாமல் பார்க்கும் நமக்கு குழந்தைக்கு பாடம் சொல்வது போல் கதை சொல்கிறார் மணிரத்னம். திரைக்கதை பின்னல் மிகவும் பலமாய் இருப்பதால் கதையை பற்றி பெரிதும் கவலை படாமல் "என்ன தான் அப்படி ஒரு Modern ராமாயணம்?" என ஆர்வமாய் நாம் பார்க்க துவங்கும் நேரத்தில் தான் வீராவின் வீர சாகசங்களும், ராகினியின் போராட்டமும், தேவ்'இன் Police நடவடிக்கைகளும் என அல்லோல  கல்லோலப்பட்டு விடுகிறோம் நாம். ராகினியின் தைரியத்தையும் துணிச்சலையும் பார்த்ததும் மனதில் மெல்ல ஒரு ஓரமாய் காதல் பூக்கிறது வீராவுக்கு. தப்பிக்க முயற்சி செய்யும் ராகினியை இழுத்து கொண்டு ஒவ்வொரு இடமாய் செல்கிறார் வீரா. அவரை பின் தொடர்ந்து தேவ்'உம் அவரது STF Police படையும்.

விக்கிரமசிங்கபுரம் - திருநெல்வேலி பக்கமாய் இருக்கும் இந்த ஊரைய கட்டி அல்லும் பெரிய தலை தான் 'வீரா' என்கிற 'வீரய்யா'. இதை தட்டி கேட்க வரும் பொறுப்பான Police அதிகாரியான தேவ் பிரகாஷ் வீராவின் தங்கை திருமணத்தின் போது, வீராவை சுடுகிறார். தப்பித்த வீராவை தேடும் Police வீராவின்  தங்கை வெண்ணிலாவை காவல் நிலையத்திற்கு இழுத்து சென்று உருக்குலைத்து அனுப்பி வைக்கிறது. இதை கண்டு பொங்கி எழுந்து தான் தேவி'இன் மனைவி ராகினியை கடத்துகிறார் வீரா. இதை தான் இடைவேளைக்கு பிறகு வரும் Flashback காட்சிகள் விளக்கமாய் உரைக்கின்றன.

பல போராட்டங்களுக்கு பிறகு தான் தம்பியை கொன்ற தேவ்' இடமே ராகினியை தந்துவிட்டு தப்பி செல்கிறார் வீரா. 14 நாட்களாய் வேறொரு ஆடவனுடன் இருந்த தன் மனைவியை சந்தேகப்படுகிறார் தேவ். இதை கண்டு கொதித்தெழும் ராகினி வீராவிடமே திரும்பி செல்கிறார். வீரா ராகினியை ஏற்று கொண்டாரா? வீராவுக்கு என்ன ஆயிற்று? தேவ் வீராவை பிடித்தாரா இல்லையா? என்பது தான் Climax.

இது சில மாற்றங்கள் நிறைந்த ஒரு நவீன கால ராமாயணம் என கொண்டால் அவர்களின் Start cast இதோ:


ராமன் - ப்ரித்விராஜ் - தேவ் பிரகாஷ்
சீதை - ஐஸ்வர்யா ராய் பச்சன் - ராகினி
ராவணன் - விக்ரம் - வீரய்யா
கும்பகர்ணன் - பிரபு - சிங்கராசன்
விபீஷணன் - முன்னா - சர்க்கரை
சூர்பனகை - ப்ரியாமணி - வெண்ணிலா
ஜடாயு - ஜான் விஜய் - ஹேமந்த் குமார்
ஹனுமான் - கார்த்திக் - ஞான பிரகாசம்


Forest Officer'ஆய் வரும் கார்த்திக், சிங்கராசுவாய் வரும் பிரபு, பிரபுவின் மனைவியாய் ரஞ்சிதா, வீரவின் தங்கையை வரும் ப்ரியாமணி என அனைவரும் தன் பங்கை செவ்வனே செய்திருக்கிறார்கள். சர்க்கரையை வரும் முன்னாவும், ஹெமந்தாய் வரும் ஜான் விஜயும், அரவாணியாய் வரும் வையாபுரியும் கூட சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.


இசை புயலின் தயவால் பாடல்கள் அனைத்தும் அருமை. "கள்வரே" பாடல் எனக்கு கேட்க்கும் போது பிடிக்கவில்லை என்றாலும் பார்க்கும் போது பிடித்து விட்டது. அருமையான நடனம். ஆனால் அவர் ரொம்பவே "Drums" சிவமணியை இந்த படத்தில் பயன்படுத்திவிட்டார். பல இடங்களில் நன்றாய் இருந்தாலும் சில இடங்களில் தலை வலிக்கிறது. போதாகுறைக்கு விக்ரம் வேறு "பக் பக் பக் பக்" என கூவி "கந்தசாமி"யை நினைவுபடுத்துகிறார். Climax'இல் இரண்டு பாடல்கள் புதிதாய் இடம் பெற்றுள்ளன. ஒன்று "கலிங்கத்து பரணி" பாடல், மற்றொன்று "நான் வருவேன்" என இசை புயலின் உருக்கும் குரலில். அந்த கடைசி பாடலுடன் படம் முடியும் போது மனதில் ஒரு அழுத்தம். V.மணிகண்டன் மற்றும் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் இந்தியாவா இது என நாம் வியக்கும் வண்ணமாய் இருக்கிறது காட்சிகள். ஆனால் ஒரே ஈரமாய் இருக்கிறது படம் முழுதும். ஈரம்-2 என வைத்திருக்கலாமோ?



ஐஸ்வர்யா அவர்களின் ஆடை அலங்காரம் படு கேவலம். அந்த கொடுமையை என் வாயால் சொல்ல முடியாது. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். சுகசினியின் வசனங்களில் ஆழம் இல்லை. ராகினியின் வீரத்தை பார்த்து பிரமிக்கும் வீரா அவர் மாற்றான் மனைவி என்பதை மறந்து தன்னை திருமணம் செய்ய சொல்லி கேட்கிறார். அதற்கான வசனம் "எங்களோடவே தங்கிடுறீயலா?". மணிரத்னம் எழுதி இருந்த இந்த வசங்களின் ஆழமும் அர்த்தமும் வேற. அவரது படங்களின் பலமே குறைவான ஆழமான பாதி வசனங்கள் தான். மணிரத்தினம் படங்களில் அவர் மனைவி தலையிடலாம் ஆனால் அது இப்படி சொதப்பி வைக்காத வரை மட்டுமே.

மணிரத்னத்தின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. ஆனால் கண்டிப்பாக முதல் இடம் இல்லை. மௌன ராகம், நாயகன், தளபதி...என பெரிய வரிசையில் கடைசிக்கு கொஞ்சம் முன்னே வரக்கூடும், அவ்வளவே. ஏனைய இயக்குனர்களுடன் Compare செய்தால் இது இந்த வருடத்தின் சிறந்த படங்களில் ஒன்று.