Saturday, 20 May 2017

நான் வரும் வரை

உன்னோடிருந்த தருணங்களில் உணரா காதல்
உன்னை பிரியும் பொழுதுகளில் உணர்கிறேனடி
இன்று அப்படியொரு பொழுதே...

வானூர்தியில் பகட்டாய் மேலே செல்ல
மனம் மட்டும் உனைநோக்கி தவழ்கிறது
மாயம் செய்தனையோ?
மலர் அம்புகள் எய்தனையோ?
மனதின் புலம்பல்கள் ஆயிரமடி...

நிலவும் நானுமாய் தனிமையானவனை
'சூரிய'னாய் வந்து
'நீரவு'ம் நானுமாய் மாற்றியவள் நீ
என்னை மீண்டும் கவிஞனாக்கியவள் நீ
என் கவிதையும் நீயடி

நான்காண்டு மணவாழ்க்கையில் உணரா இன்பம்
மீண்டும் உன்னை காண்கையில் கொள்வேனடி
காத்திரு அன்பே நான் வரும்வரை,

கனவில் அணைப்பேன் அதுவரை...

Wednesday, 13 May 2015

என் மனைவி என் காதலி

உன்னை கடிந்து கொள்ளும் தருணங்களில்
என் கோபத்தினால் காதல் குறைவதில்லை,
கலவி கொண்டு பின்னுறங்கும் பொழுதுகளில்
என் காமத்தினால் காதல் மறைவதில்லை,
நம் குழந்தையின் சிரிப்பில்
இவ்வுலகம் மறக்கும் நிமிடங்களில்
என் பாசத்தினால் காதல் மாறுவதில்லை,
என் மனைவியே காதலியாய் அமைந்ததினால்
என் காதல் என்றும் மூப்பெய்துவதும் இல்லை..

Thursday, 10 July 2014

மழையும் மழைசார்ந்ததும்

சில்லென்ற மழைத்துளிகள் முகத்தில்விழ
சுறுசுறுவென கண்ணாடியை ஏற்றிவிட்டு
சிரித்துக் கொள்கிறேன் காருக்குள் நான்...
மழையும் குளிரும்
நாம் கூடிக்களித்த தருணங்களை
நினைவில் நிறுத்தி சென்று விட்டிருந்தன...
மெல்ல அசைபோட்டுக்கொண்டே
வீடு வந்து சேர்கிறேன் நான்...
வாசற்கதவில்பட்டு உன்னைத் தீண்டிய மழையை
செல்லமாய் கோபித்துக்கொண்டு
எனக்காய் காத்திருக்கிறாய் நீ,
உன் வெட்கப்புன்னகை உணர்த்துகிறது
உன் நினைவுகளிளும் அதேதருணங்கள் என்று...

Thursday, 2 August 2012

மீண்டும் கவிஞனாய்

 
 
நிலா, வானம், இயற்கை என
எழுதுவதே சலித்து போய்விட
எழுதுவதை நிறுத்திவிட தோன்றும்
சில சோம்பல் நேரங்களில்
உன் காதல்
என் நெஞ்சை புரட்டிப் போட்டு
மீண்டும் கவிஞனாய் மாற்றுகிறது...

Tuesday, 31 July 2012

மனைவி இழந்தவன்

 
 
உன் இதழ்களும் என் கன்னங்களும் உரசிய
அந்த சிணுங்கல் பொழுதுகள்
என் நெஞ்சின் மேல் நீ உறங்கிய
அந்த இனிய இரவுகள்
ஊடல்கள் கொண்டு நாம் பிரிந்த
அந்த சில நிமிடங்கள்
கலவி கொண்டு இறை உணர்ந்த
அந்த காதல் பொழுதுகள்
மனதின் எங்கோ ஓர் மூலையில்
மங்கலாய் நினைவுக்கு வந்து போகிறது
உன் ஒவ்வொரு நினைவு நாளிலும்...

காத்திருப்புஉன்னை முத்தமிடும் நாட்களுக்காக
காத்திருக்கிறேன் நான்
முத்தமிடா ஒவ்வொரு நாளும்...

Friday, 27 July 2012

நிலவும் நானும்...


சூழ்ந்திருந்த வான்மேகங்கள் இல்லை,
சிதறிக்கிடந்த விண்மீன்கள் இல்லை,
ஒளிவீசிக் கொண்டிருந்த நீயுமில்லை...
காணாமல் போனதன் காரணமேன்?
என்னவளின் அழகை கண்டுவிட்டாயோ?
இல்லை, அவள்புகழ் நான் பாடியதை கேட்டாயோ?
ஆனாலும் உனக்கு இவ்வளவு பொறாமை கூடாதடி,
எத்தனை நாள் தான்
உன்னையே வர்ணிப்பேன் நான்...

Thursday, 3 May 2012

என் நண்பனுக்காக...என் நட்பின் நங்கூரம் 
உன்னுள் ஆழ புதைந்திருக்கிறது... 
என்மேல் நீ கோபப் பட்டாலும் 
துரைமுகத்தே நிற்கும் 
அலை அடித்த கப்பலை 
ஆடி அசைவேனே ஒழிய 
உன்னை விட்டு விலகி செல்லேன்...

எல்லாம் நமக்காக...வெறுமையாய் தெரிந்த உலகம்
இன்று பச்சை பசுமையாய்
பழகிப்போன பாடல்கள் எல்லாம் 
இன்று புதுப்புது அர்த்தங்களுடன்
வெறித்து பார்த்த வெண்மேகங்கள்
இன்று சிரித்துவிட்டு செல்கின்றன...
எல்லாமே மாறிவிட்டது
நம் காதலால்...
இங்கே உலவும் அனைத்தும் 
நமக்காகவே படைக்கப்பெற்றன
நம் மகிழ்சிக்க்காகவே...
வா அன்பே,
உலகை வலம் வருவோம்
வெற்றிக்களிப்பில் மிதந்து வருவோம்...