Thursday, 10 September 2009

நம்மைப் பற்றி எழுதுவோம்...


கனமழை பெய்து ஓய்ந்திருந்த சாலையில்
சீறிச் செல்லும் ஊர்தியின்
ஜன்னல் இறக்கி
தவழ்ந்து வந்த தென்றலை
தழுவும் இத்தருணம்,
என் காதலை
கவிதையால் சொல்லும் தருணம்...

எப்பொழுது வேண்டுமானாலும் வருவேனென
இடியுடன் உரைக்கும் மழை மேகங்கள்,
மண்வாசனையுடன் கலந்த இளந்தென்றல்,
என் எண்ணங்கள் போல்
பின்னோக்கி வேகமாய் செல்லும்
சாலையோர கட்டிடங்கள்,
காற்றில் அலைபாயும்
என் முன் தலைமுடி,
சிறு காது மடல்களிலும்
விழி மூடிய இமைகளிலும்
பட்டுத் தெறிக்கும் சிறு தூறல்...
உலகை ரசித்துக் கொண்டே
உன்னைப் பற்றி எழுத
வார்த்தைகள் தேடும் படலம்
ஒருபுறம் இருக்க...
இயற்கையின் அழகில் மூழ்கும்
முயற்சி மறுபுறம் இருக்க,
சட சடவென்று முகத்தில் அறைந்தது
சாரலாய் மாறியிருந்த மாரியின் தூறல்...

ஜன்னலை ஏற்றிவிட்டு
நினைத்துப் பார்க்கிறேன்...
உன்னைப் பற்றி சில வார்த்தைகள்
எழுத எத்தனித்திருந்த நான்
என்னைப் பற்றியே
பல வார்த்தைகள் எழுதியிருந்தேன்...

இதைப் பார்த்து
நீ கோபித்தாலும்
சமாதானம் செய்ய
வழியறிவேன் நான்...

என்னைப் பற்றி எழுதினாலும்
உன்னைப் பற்றி எழுதினாலும்
இரண்டுமே
நம்மைப் பற்றியது தானே
என் கண்ணே....

இது போலவே இன்னும்
நம்மைப் பற்றி
பல கிறுக்கல்கள் எழுதுவேன் நான்...
மன்னிக்கவும்,
நம்மைப் பற்றி
பல கிறுக்கல்கள் எழுதுவோம் நாம்...

No comments:

Post a Comment