Monday, 21 September 2009
மனதுக்குள் மத்தாப்பு
இந்த இரண்டு நாட்கள் என் வாழ்வின் மறக்க முடியாத நாட்கள். இரண்டு மாதம் கழித்து என் தந்தையை நேரில் கண்டேன். என்னைப் பார்க்க விழுப்புரத்தில் இருந்து புது டெல்லிக்கு புறப்பட்டு வந்திருந்தார்.
இரண்டு நாட்கள இரயில் பயணம் முடிந்து, இரண்டு நாட்கள் என்னுடன் தங்கி விட்டு இன்று மீண்டும் இரயில் ஏறி சென்று விட்டார். என் தந்தைக்கு சமையல் செய்யும் பாக்கியம் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. முன்பு நான் பல முறை அவருக்கு Maggi சமைத்து கொடுத்துள்ளேன். அவருக்கு பிடிக்காவிட்டாலும் ரசித்து சாப்பிடுவார். ஆனால் இது தான் முதல் முறை அவருக்கு பிடித்த காரக் குழம்பு, மீன் குழம்பு என விதவிதமாக நான் சமையல் செய்தது. Of course, என் அறை நண்பரின் உதவியுடன் தான்...
தீபாவளிக்கு ஊருக்கு சென்றவுடன் என் அம்மாவுக்கும் தங்கைக்கும் ஒரு முறை இது போல் சமையல் செய்து போட வேண்டும். என் நெடுநாள் ஆசையில் ஒன்று அன்று நிறைவேறி விடும்.
நேற்று நானும் அப்பாவும் ஷாப்பிங் போனோம். மிகப் பெரிய Shopping Mall'களை பார்த்தறியாதவர். நான் Food coupons'ஐ தண்ணி போல செலவு செய்வதை பார்த்து பிரமித்து இருக்கலாம். ஆனால் தன் பிள்ளை சம்பாரித்து செலவு செய்வதை பார்த்து கண்டிப்பாய் பூரித்து இருப்பார்.
நான் நிரம்ப மகிழ்ச்சியாய் இருப்பதற்கு முக்கியமான காரணம் மேலும் ஒன்று உள்ளது. இந்த வலைப் பதிவில் உள்ள என் கவிதைகளை தந்தையிடம் காண்பித்தேன். நான் கல்லூரி சமயத்தில் எழுதிய கவிதைகளை எனக்குத் தெரியாமல் படித்ததையும், என்னுள்ளே இப்படி ஒரு ஆற்றல் உண்டு என்பதை எண்ணி வியந்ததையும் சொன்னார். இத்தனைக்கும் இப்பொழுது எழுதும் அளவுக்கு சுமாராக கூட அப்பொழுது எழுதவில்லை. என்ன இருந்தாலும் தன் மகனை விட்டுக் கொடுப்பாரா? அதான் அப்படி கூறினார் போலும்.
ஆனால் இன்று படித்து விட்டு எதுவுமே சொல்லவில்லையே. ஒருவேளை அம்மாவிடம் போய் சொல்லுவாரோ? அம்மாவிடம் தனிமையில் ஒரு நாள் இதைப் பற்றி கேட்போம். சப்பைக் கவிதைக்கே சூப்பர் என்றவர், என் நண்பர்கள் பாராட்டும் அளவுக்கு இருக்கும் இந்த கவிதைகளை பற்றி பேசாமலா இருப்பார்...
முன்பு கல்லூரி சமயத்தில் படிப்பில் கவனம் சிதறிவிடும் என்று இந்த மாதிரி கவிதைகளைப் பற்றியும் நான் எழுதிய இரண்டு சிறு கதைகளைப் பற்றி அறிந்தும் எந்தக் கருத்தும் கூறவில்லை. "இதெல்லாம் வேணாண்டா. ஒழுங்கா படிக்கற வேலைய பாரு" என்று மட்டும் கூறினார். இன்று அமைதியாய் அவர் இருந்ததே மிகப் பெரிய பாராட்டு. எனினும், அவர் கருத்துக்களை கேட்க ஆவலுடன் இருக்கிறேன் நான்...
பின் குறிப்பு: மேலே இருக்கும் புகைப்படம் என் தங்கையின் நிச்சையதார்த்தின் பொழுது எடுத்தது. A very proud moment for me.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment