Thursday, 3 December 2009

என் தந்தையின் பார்வையில்...


மறந்தும் கூட எடுத்துவிடாமல்
தெரிந்தே மறந்துவிட்டு சென்ற
என் மூக்கு கண்ணாடியை
எடுத்து வரும்படி
வாசலில் இருந்து பணித்தேன்...
"உங்களுக்கு எப்பவும் இதே வேலை,
எப்படித் தான் மறந்து போவீங்களோ?" என
செல்லமாய் சிணுங்கிக் கொண்டே
உள்ளிருந்து வரும் உனக்கு
புன்னகையை பதிலாய் வழங்கி
கண்ணாடியை வாங்கி
சட்டைப் பையில் வைத்துவிட்டு
இடப்பக்க கண்ணாடியில்
உதட்டை சுழித்து வழியனுப்பும்
உன் பிம்பத்தை
பார்த்து விட்டு செல்லும்
அந்த நாட்கள் மட்டுமே
இனிதாய் கழிகின்றன எனக்கு...
இதை எப்படி புரிய வைப்பேன்
என் ஞாபகமறதியை
குற்றஞ் சொல்லும்
நம் மகனிடம்...