Thursday, 2 June 2011

நானும், நான்கு ஜோடி கண்களும்...




17:37:35
அந்த அறையில் திடீரென ஒரு மௌனம். எதிரே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தவரின் ஒரு ஜோடி கண்கள் கத்தியுடன் என்னை கிழித்து விடுவதாய் பார்வை பானம் விட்டுக் கொண்டிருந்தது. இன்னொரு ஜோடி கண்களோ சமையலறையின் உள்ளே இருந்து என் பதிலுக்காக சிறு கோபம் கலந்து என்னை எரித்து கொண்டிருந்தது. சற்று முன்னர் கேட்கப் பட்ட கேள்விக்கு என் பதில் என்னவாய் இருக்கும் என ஒரு ஜோடி கண்கள் காதலுடன் படபடத்து காத்திருந்தன. கடைசியாய் ஒரு ஜோடி இளங்கண்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதது போல காற்றில் தன் பார்வையை தொலைத்து விட்டிருந்தது.

கேள்வியின் ஆழம் அப்படி! அதற்காகத் தானே பதில் சொல்லவும் யோசிக்க வேண்டியதாய் இருக்கிறது. நேற்றைக்கு இதே நேரம் என் கைபேசியில் அவள் சொன்னது நினைவிற்கு வந்தது. "அப்பா உன்கிட்ட நம்ம விஷயமா பேசணுமாம்". அப்போதே கலக்க ஆரம்பித்த வயிறு சற்று முன் அவள் அம்மா தந்த குளிர்பானம் குடித்தும் கலக்கிக் கொண்டுதானிருந்தது. இரவெல்லாம் உறங்கமால் கண்கள் சிவந்திருக்க, மழையில் நனைந்து அவள் வீடு வந்து சேர்கையில் என் பரட்டை தலையும் சட்டி போல சுருண்டிருக்க கூச்சத்துடனும் கொஞ்சம் பயத்துடனும் இருந்து, பின்னர் தெளிந்து, இப்பொழுது தான் அந்த பெரிய சாய்வு இருக்கையில் சற்றே தாரளமாக உட்கார்ந்திருந்தேன். அதற்குள் இப்படி ஒரு கேள்வியா...

"அதான் உன்ன பத்தி எல்லாம் கேட்டு தெரிஞ்சுகிட்டாங்களே, அப்பறோம் எதுக்கு இப்படி ஒரு கேள்வி" என உறுத்திய மனசாட்சியை கை அமர்த்தி அந்தக் கேள்வியை ஓட விட்டேன்.  "நீ சொன்னதெல்லாம் சரிப்பா...என் பொண்ணுங்கள நல்ல சொகுசா வளர்த்திட்டேன், particularly my elder daughter. She grew up like a princess. அவள நீ எப்படி நீ கண்கலங்காம பத்திரமா பார்த்துப்ப?". 

பெற்றவர்கள் பார்த்து பேசியிருந்தால் இப்படி ஒரு கேள்வியே வந்திருக்காது. காதல் கல்யாணம் ஆயிற்றே. அதுவும் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தெரியாமல் அல்லவா இங்கே வந்திருக்கிறோம். மனதில் இருப்பதை கொட்டிவிட வேண்டியது தான். என்னை பற்றி தவறாய் நினைத்தாலும் பிழை இல்லை. "ஆம், அது தான் சரி. " என மனசாட்சி ஆமோதிக்க தரையை நோக்கி தாழ்ந்திருந்த என் கண்கள் அவரின் கண்களை நோக்கின. மெல்ல என் உதடுகள் பிரிந்து அந்த வார்த்தைகள் வெடித்து சிதறின.

17:37:50
"She may be one of your princess. But she is my ONLY Queen. So நம்பி எனக்கு உங்க பொண்ண கொடுங்க. உங்க பொண்ண நீங்க பார்த்துக்கிட்டத விட நான் என் மனைவிய பத்திரமா பார்த்துப்பேன்". நானும் அவரைப் போலவே பாதி ஆங்கிலமும் பாதி தமிழுமாய் கொட்டித் தீர்த்தேன் என் எண்ணத்தை. மனதின் பாரம் இப்பொழுது குறைந்திருந்தது. காதல், ஜாதி வித்தியாசம், மொழி மற்றும் கலாச்சார வேறுபாடு என ஒரு மணி நேரம் மாய்ந்து மாய்ந்து அவர் பேசிய எல்லாவட்ட்ருக்கும் பதில் கூறிய பிறகும் அவர் இப்படி ஒரு கேள்வி கேட்டால் நான் இதை விட வேறு என்ன பிரமாதமாய் பதில் சொல்லிவிட முடியும். என்னை மரியாதை தெரியாதவன் என்பர் நினைத்தாலும் பரவாயில்லை என்ற முடிவில் தான் அப்படி ஒரு பதிலை கூறினேன். மீண்டும் அந்த அறையில் மௌனம். என் பதிலுக்காய் படபடத்த என் காதலியின் கண்களும், எதையும் சட்டை செய்யாதது போலிருந்த அவள் தங்கையின் கண்களும், சமையலறையின் உள்ளே இருந்து இன்னமும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த அவள் அன்னையின் கண்களும் என்னெதிரே இருந்தே அவள் தந்தையையே சுற்றிக் கொண்டிருந்தன. 

17:38:05
அந்த மௌனத்தின் அர்த்தம் விளங்காமல் இப்பொழுது நான் மட்டும் அல்லாடிக் கொண்டிருக்க, அவர் எழுந்து என்னிடம் வந்து கை குலுக்கினார். "வீட்ல அப்பா அம்மா கிட்ட சொல்லி வந்து பொண்ணு கேட்க சொல்லுங்க மாப்ளை" என்றார் என் மாமா.