Thursday, 2 June 2011

நானும், நான்கு ஜோடி கண்களும்...




17:37:35
அந்த அறையில் திடீரென ஒரு மௌனம். எதிரே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தவரின் ஒரு ஜோடி கண்கள் கத்தியுடன் என்னை கிழித்து விடுவதாய் பார்வை பானம் விட்டுக் கொண்டிருந்தது. இன்னொரு ஜோடி கண்களோ சமையலறையின் உள்ளே இருந்து என் பதிலுக்காக சிறு கோபம் கலந்து என்னை எரித்து கொண்டிருந்தது. சற்று முன்னர் கேட்கப் பட்ட கேள்விக்கு என் பதில் என்னவாய் இருக்கும் என ஒரு ஜோடி கண்கள் காதலுடன் படபடத்து காத்திருந்தன. கடைசியாய் ஒரு ஜோடி இளங்கண்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதது போல காற்றில் தன் பார்வையை தொலைத்து விட்டிருந்தது.

கேள்வியின் ஆழம் அப்படி! அதற்காகத் தானே பதில் சொல்லவும் யோசிக்க வேண்டியதாய் இருக்கிறது. நேற்றைக்கு இதே நேரம் என் கைபேசியில் அவள் சொன்னது நினைவிற்கு வந்தது. "அப்பா உன்கிட்ட நம்ம விஷயமா பேசணுமாம்". அப்போதே கலக்க ஆரம்பித்த வயிறு சற்று முன் அவள் அம்மா தந்த குளிர்பானம் குடித்தும் கலக்கிக் கொண்டுதானிருந்தது. இரவெல்லாம் உறங்கமால் கண்கள் சிவந்திருக்க, மழையில் நனைந்து அவள் வீடு வந்து சேர்கையில் என் பரட்டை தலையும் சட்டி போல சுருண்டிருக்க கூச்சத்துடனும் கொஞ்சம் பயத்துடனும் இருந்து, பின்னர் தெளிந்து, இப்பொழுது தான் அந்த பெரிய சாய்வு இருக்கையில் சற்றே தாரளமாக உட்கார்ந்திருந்தேன். அதற்குள் இப்படி ஒரு கேள்வியா...

"அதான் உன்ன பத்தி எல்லாம் கேட்டு தெரிஞ்சுகிட்டாங்களே, அப்பறோம் எதுக்கு இப்படி ஒரு கேள்வி" என உறுத்திய மனசாட்சியை கை அமர்த்தி அந்தக் கேள்வியை ஓட விட்டேன்.  "நீ சொன்னதெல்லாம் சரிப்பா...என் பொண்ணுங்கள நல்ல சொகுசா வளர்த்திட்டேன், particularly my elder daughter. She grew up like a princess. அவள நீ எப்படி நீ கண்கலங்காம பத்திரமா பார்த்துப்ப?". 

பெற்றவர்கள் பார்த்து பேசியிருந்தால் இப்படி ஒரு கேள்வியே வந்திருக்காது. காதல் கல்யாணம் ஆயிற்றே. அதுவும் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தெரியாமல் அல்லவா இங்கே வந்திருக்கிறோம். மனதில் இருப்பதை கொட்டிவிட வேண்டியது தான். என்னை பற்றி தவறாய் நினைத்தாலும் பிழை இல்லை. "ஆம், அது தான் சரி. " என மனசாட்சி ஆமோதிக்க தரையை நோக்கி தாழ்ந்திருந்த என் கண்கள் அவரின் கண்களை நோக்கின. மெல்ல என் உதடுகள் பிரிந்து அந்த வார்த்தைகள் வெடித்து சிதறின.

17:37:50
"She may be one of your princess. But she is my ONLY Queen. So நம்பி எனக்கு உங்க பொண்ண கொடுங்க. உங்க பொண்ண நீங்க பார்த்துக்கிட்டத விட நான் என் மனைவிய பத்திரமா பார்த்துப்பேன்". நானும் அவரைப் போலவே பாதி ஆங்கிலமும் பாதி தமிழுமாய் கொட்டித் தீர்த்தேன் என் எண்ணத்தை. மனதின் பாரம் இப்பொழுது குறைந்திருந்தது. காதல், ஜாதி வித்தியாசம், மொழி மற்றும் கலாச்சார வேறுபாடு என ஒரு மணி நேரம் மாய்ந்து மாய்ந்து அவர் பேசிய எல்லாவட்ட்ருக்கும் பதில் கூறிய பிறகும் அவர் இப்படி ஒரு கேள்வி கேட்டால் நான் இதை விட வேறு என்ன பிரமாதமாய் பதில் சொல்லிவிட முடியும். என்னை மரியாதை தெரியாதவன் என்பர் நினைத்தாலும் பரவாயில்லை என்ற முடிவில் தான் அப்படி ஒரு பதிலை கூறினேன். மீண்டும் அந்த அறையில் மௌனம். என் பதிலுக்காய் படபடத்த என் காதலியின் கண்களும், எதையும் சட்டை செய்யாதது போலிருந்த அவள் தங்கையின் கண்களும், சமையலறையின் உள்ளே இருந்து இன்னமும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த அவள் அன்னையின் கண்களும் என்னெதிரே இருந்தே அவள் தந்தையையே சுற்றிக் கொண்டிருந்தன. 

17:38:05
அந்த மௌனத்தின் அர்த்தம் விளங்காமல் இப்பொழுது நான் மட்டும் அல்லாடிக் கொண்டிருக்க, அவர் எழுந்து என்னிடம் வந்து கை குலுக்கினார். "வீட்ல அப்பா அம்மா கிட்ட சொல்லி வந்து பொண்ணு கேட்க சொல்லுங்க மாப்ளை" என்றார் என் மாமா. 

Friday, 4 March 2011

தேவதைகளின் தேவதை


எங்கும் ஒரே அமைதியாய்,
உலகமே ஊமையாய் நிற்கிறது,
நறுகமழ் தென்றல் வீசியும்
மரங்களின் சலசலப்பு ஏனோ இல்லை,
எந்திரமாய் பூமி சுற்றியும்
மந்திரமாய் சூரியனின் வெப்பமேதும் இல்லை,
உயிருள்ள கடைசி ஜீவனும்
உள்ளே உறைந்து போய் வியந்து நிற்கிறது!
"இப்படி ஒரு அழகா என்று?"
இதையொன்றும் அறிந்திராமல்
பூமி நோகுமோ
இல்லை பாதம் நோகுமொவென
பொத்தி பொத்தி நடக்கிறாய் நீ,
தேவதைகளின் தேவதையை சொந்தமாக்கிய கர்வத்தில்
நிலம் அதிர நடக்கிறேன் நான்...

Sunday, 16 January 2011

ஆடுகளம் - என் பார்வையில்



பைவ் ஸ்டார் பில்ம்ஸ் தயாரிப்பில் சன் பிக்சர்ஸ் வெளியீட்டில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளிவந்திருக்கும் பொங்கல் விருந்து தான் 'ஆடுகளம்'. விருந்து என்றால் சாதாரண விருந்து அல்ல நல்லா அருசுவையான மகா விருந்து.

சேவல் சண்டையின் வரலாற்றை கேட்க கேட்க ஆச்சர்யத்துடன் படம் பார்க்க துவங்கினேன். முகத்தில் ரத்த காயத்துடனும் கையில் கத்தியுடனும் ஒரு ஒட்டு வீட்டினுள் தனுஷ், கை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தபஸ்ரீ பன்னு. இதற்க்கான flashback'ஆக ஆரம்பிக்கிறது மொத்த படமும். மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் பெரிய சேவல் சண்டைக்காரர் பேட்டைக்காரன். அவரின் இரண்டு கைகள் தாம் துரை (கிஷோர்) மற்றும் கருப்பு (தனுஷ்). சேவல் சண்டையில் பேட்டைகாரரின் பரம எதிரி தான் S.I. ரத்தினசாமி. இவர்களுக்குள் நடக்கும் சேவல் பந்தயத்தில் போலீஸ் ரெய்டு வர எல்லாரும் திக்காளுக்கு ஒருத்தரை சிதறி ஓடுகின்றனர். அதில் நம் ஹீரோ கருப்பும் ஒருவர். அவரின் சேவலை ரத்தினசாமி ஆட்கள் களவாடி சென்று ஐரீன் (தபஸ்ரீ) வீட்டில் அவர் கோழியுடன் சேர்த்து ஒளித்து வைத்து விடுகின்றனர். சேவலை மீது கோழியை அறுத்து போடும் போது ஐரீனை பார்க்கிறார் கருப்பு. பின்னர் என்ன? காதல் தான்...

ஐரீனின் பின்னால் சுற்றி சுற்றி வருகிறார் கருப்பு. அவரும் பொய்யாய் காதலிப்பதாய் சொல்லி வைக்கிறார். இதற்கிடையில் சண்டைக்காக சேவலை தயார் செய்வதில் கோட்டை விடுகிறார் கருப்பு. பேட்டைக்காரர் அறுத்தெறிய சொன்ன பின்பும் சேவலை சண்டைக்காய் பாசமாய் வளர்க்கிறார். சில பில திருப்பங்களுக்கு பின்  சேவல் சண்டையில் பேட்டைகாரர் சார்பில் ரத்தினசாம்யின் சேவலுக்கு எதிராக தன் சேவலை பறக்க விடுகிறார். அது நிச்சயம் தோற்று தனக்கு அவமானத்தை தேடித் தரும் என் நினைத்து தனக்கும் அந்த பந்தயதிர்க்கும் சம்பந்தம் இல்லை, தன் பெயரைச் சொல்லி பந்தயத்தில் இருப்பவர் எவருடனும் தனுக்கு சம்பந்தம் இல்லை என்று மைக்கில் அறிவித்து விடுகிறார். இதையும் மீறி கருப்பு தொடர்ந்து நான்கு பந்தயத்தில் தன் சேவலை பறக்க விட்டு பெரிய வெற்றி பெறுகிறார்.

தன் வார்த்தையை மீறி சேவலை வளர்த்த கோவத்திற்கு மேலும் மேலும் பல சம்பவங்கள் எண்ணையை ஊற்றி பெருந்தீயாய் வளர்க்க பேட்டைகாரரும் கருப்பும் பிரிகிறார்கள். துரை மட்டும் சமாதான பாலமாய் இருக்க அவருடனும் மனஸ்தாபம் வளர்ந்து பகையாய் முடிகிறது. முந்தைய பந்தயத்தில் சம்பாதித்த மூன்று லட்சம் கருப்பின் பணம் என்ன ஆனது? வாழ்க்கையில் settle ஆனாரா? அவருடைய காதல் கை கூடியதா? பேட்டைகாரர் மற்றும் துரையுடன் பகை என்ன ஆயிற்று? இப்படி பல கேள்விகளுக்கு பதில் தான் இரண்டாம் பாதி படம். இனி படத்தை பற்றி மொத்தமாய் பார்ப்போம்...

G.V.பிரகாஷின் இசை அருமை. யாத்தே யாத்தே மற்றும் அய்யய்யோ பாடல்கள் தான் அருமை என்று நினைத்திருந்தேன். அந்த rap பாடல் கூட படத்தில் வரும் போது அருமையாகவே இருக்கிறது. படத்தில் நிதானமான திரைக்கதைக்கு உறுதுணையாய் ஒரு நெஞ்சை பிசையும் இசை வருகிறது. Godfather BGM மாதிரி. அருமை. தனுஷின் நடிப்பிற்கு ஒரு பெரிய தீனி போட்டிருக்கிறார் வெற்றிமாறன். வெளுத்து வாங்கி இருக்கிறார். "நாம ரெண்டு பெரும் ஒரு கிச் அடிச்சிக்கலாமா?" என ஆர்வமாய் அவர் கேட்கும் அந்த ஒரு dialogue'கிற்காகவே படம் பார்க்க சென்றவன் நான். "ஒத்த சொல்லால" பாடலுக்கு திரையரங்கத்தில் ஆடாமல் இருக்க என்னை நானே கட்டுப்படுத்த அவ்வளவு சிரமமாய் போய்விட்டது. படத்தின் முதல் பாதியில் இவரின் யதார்த்தமான நடிப்பில் கொடுத்து காசிற்கு வசூலென முடிவிற்கு வந்துவிட்டேன். சேவல் சண்டையை படமாக்கியிருக்கும் விதமும் அந்த க்ராபிக்ஸும் ஏதோ இரண்டு போர் வீரர்கள் சண்டை போடுவதை போல் உணர முடிகிறது. ஒளிப்பதிவாளுருக்கும் ஸ்பெஷல் எபக்ட்ஸ் டீமுக்கும் பாராட்டுக்கள். கிளைமாக்ஸில் துரையும் கருப்பும் சண்டையிடுவதை சில நொடிகள் சேவல் சண்டையை போல் சித்தரித்திருப்பது அருமை. வெற்றிமாறனுக்கு சபாஷ். ஆனால் படத்தின் முடிவு கொஞ்சம் பாரமாய் இருக்கிறது. சந்தோஷமாய் படம் பார்த்தே வந்த நமக்கு இப்படி ஒரு கனமான முடிவு ஏற்றுக் கொள்ள கடினம் தான்.

தபஸ்ரீக்கு ஆண்ட்ரியா ஜெரமையாவின் குரல் மிகவும் பொருந்தி இருக்கிறது. பேட்டைக்காரருக்கு ராதா ரவியின் குரல் OK தான் என்றாலும் அவர் முகமே வந்து போகிறது. கிஷோருக்கு சமுத்திரக்கனியின் குரல் கணீரென இருந்தாலும் அவருடைய சொந்த குரலே நல்லா தானே இருக்கும் எனத் தோன்றாமல் இல்லை. வசனங்கள் சில இடங்களில் புரியவில்லை. பின்னணி இசை ஒரு காரணமென்றால் மதுரையின் ஆழமான வார்த்தைகளும் ஒரு காரணம். கதை களம் மிகவும் புதிது. கதாநாயகன் என்றில்லாமல் கதையின் நாயகர்களாய் இருக்கின்றனர் அனைவரும். இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளரும் இதில் அடக்கம். நகைச்சுவை, காதல், பொறாமை, வஞ்சம், சூழ்ச்சி, சந்தேகம், பகை என பல பரிணாமங்களில் படம் பிரயாணம் செய்கிறது.

மொத்தத்தில் பொங்கலுக்கு குடும்பத்துடன் போய் மக்கள் நிம்மதியாய் பார்க்க வேண்டிய திரைச்சித்திரம் இது. கொடுத்த காசிற்கு தேவையான entertaainment இந்த படத்தில் நிச்சயம் உண்டு. தனுஷின் வெற்றி பாதையில் இன்னொரு மைல் கல் இந்த ஆடுகளம்.