Wednesday 18 January 2012

இரவும் அவளும்...


வாச மலர்களை மொத்தமாய்
என் மேல் கொட்டிவிட்டு
முடிந்தால் உறங்கிப்பார் என்று
கேலி செய்கிறான் காமன்..
உன் கூந்தல் நறுமணத்தில் கிறங்கிப் போனவனுக்கு 
இது எம்மாத்திரமென நினைத்து
உன் கூந்தல் கலைக்கிறேன்
உன் உறக்கம் கலைக்காமல்...

முன்நெற்றியில் முத்தமிட்டு நிமிர்ந்து பார்க்கிறேன்
வானத்து நட்சத்திர பெண்கள்
கண்கள் சிமிட்டி பரிகசிக்கின்றன
'பாரடி இவன் அதிர்ஷ்டத்தை
நம்மோடு இருந்த தேவதை ஒன்று
அவன் நெஞ்சின் மேல்
உறங்கிக் கொண்டிருக்கிறாள் இன்று...

காமனுக்கும் நட்சத்திர கண்ணிகைகளுக்கும்
என் புன்னகையை பதிலாய் தந்துவிட்டு
அடுத்து வரப் போகும்
நிலா மற்றும் தென்றல் தோழிகளின் வருகையை
எதிர்பார்த்து புன்னகையுடன் காத்திருக்கிறேன்...
இவை ஏதும் அறிந்திடாமல்
என் நெஞ்சப் பஞ்சணையில் உறங்கும்
உன் கன்னங்களை மெல்ல நான் கிள்ள
செல்லமாய் சிணுங்கிவிட்டு
மீண்டும் உறங்கிப் போகிறாய் நீ...

No comments:

Post a Comment