Tuesday, 27 July 2010

ஒரு ஆண் தாயின் தாலாட்டு...


ஆராரோ ஆரீரரோ 
பூமகளே கண்ணுறங்கு,
வானத்து விண்விளக்கே
விழிமூடி நீயுறங்கு...

சூரியனார் வம்சமடி
சிணுங்காம கண்ணுறங்கு,
சோழர்குல மாணிக்கமே
சீக்கிரமா நீயுறங்கு...

நிலாவத் தான் புடிச்சிவர
உங்க அப்பாரு போயிருக்கார்,
விடியும் முன்னே நீயுறங்க 
வந்திடுமே நிலவும் இங்கே...

(ஆராரோ ஆரீரரோ)

நாடாள பிறந்தவளே
நிம்மதியா கண்ணுறங்கு,
பாராளும் காலம் வரும் 
பகட்டில்லாம நீயுறங்கு...

வானவில்லின் தேர் ஏறி
வானத்தையும் வென்றிடலாம்,
இன்று மட்டும் கண்ணுறங்க
நாளை முதல் உன் ஆட்சியடி...

(ஆராரோ ஆரீரரோ)

நேத்தைக்கு தான் இம்சை பண்ண
இன்னைக்குமா அதே கதை,
முடியலடி உங்கம்மாவுக்கு 
தூங்கி போடா என் பட்டுகுட்டி...

நாள் பூரா வேலைசெஞ்சு 
ஒடுங்கி போய் வந்திருக்கேன் ,
இதுக்கு மேலையும் படுத்தாம 
தூங்கி போடி என் செல்லகண்ணு...

(ஆராரோ ஆரீரரோ)

Tuesday, 20 July 2010

பரிமாறிய என் இதயம்



என் இமைகள் தேடி நீ கொடுத்த
முத்தச் சத்தம் ஓய்ந்திருக்கவில்லை,
உன் இதழ்கள் தேடி நான் பதித்த
முத்த ஈரம் காய்ந்திருக்கவில்லை,
ஆனால் நேற்று பரிமாறிக் கொண்ட 
நம் இதயத்தில் ஒன்று மட்டும்
ஏனோ சத்தம் இல்லாமல் நின்று விட்டிருந்தது.


காரணம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்
இந்த கயவன் செய்த செயலை அறியாமல்...
பழுதாய் போன 
இந்த கயவனின் இதயத்தை 
காதல் கடனாய் பெற்றாய்,
அது கஷ்டப்பட்டு துடித்து
இன்று ஒரு வழியாய் நின்றும் விட்டது
உன் இதயம் மட்டும்
என்னுளே இன்னும் பத்திரமாய்...

நான் வாழும் சொற்ப காலமும்
நினைவில் கொள்வேன்
பறித்துக் கொண்ட 
உன் இதயத்தின் பாவத்தையும்
பறி கொடுத்த
என் இதயத்தின் தவறையும்....

Monday, 5 July 2010

என் காதலியின் காதலன்



நீ விரும்பிய பாடல்களை
தேடி பிடித்து கேட்டிருக்கிறேன்,
நீ விரும்பிய படங்களை
ஆர்வமாய் பார்த்திருக்கிறேன்.
நீ சிரித்த 
நகைச்சுவைக்கு சிரித்து,
நீ அழுத
நேரங்களில் அழுதிருக்கிறேன்...

உன் ரசனையும்
என் ரசனையும்
ஒன்றென உனக்கு
புரிய வைக்க போராடியிருக்கிறேன்.
உனக்கு பிடித்தவனை
நீ கண்ட நாள் வரை...

என் போராட்டம்
உனக்கு புரியாமலே போய்விட்டது.
குற்றஞ் சொல்லவில்லை நான்,
குமுறிக் கொள்கிறேன்
மனதினுள்ளே...

உனக்கானவன் நானில்லை
என்றறிய மனம் மறுக்கிறது,
உனக்கு பிடித்தவனை
ஏற்க முடியாமல் தவிக்கிறது.
முதல் தடவையாய்
நம் ரசனை வேறுபடுகிறது.

என்னை வைக்க வேண்டிய இடத்தில்
இன்னொருவனை வைக்கிறேன்
புரிந்து கொள்ளடா
என் மட மனமே!!!
என் காதலியின் காதலன்
எனக்கு நண்பன்.
கடைசி வரை
எங்களின் ரசனை
ஒன்றாகவே இருக்கட்டும்...