Tuesday, 9 February 2010

யார் அவள்?


மழைபெய்து ஓய்ந்திருந்த
மயக்கும் மாலை வேளையில்
மழையில் முழுதாய் நனைந்துவிட்ட
மங்கை ஒருத்தியை என்
மனை வாசலில் கண்டேன்..
மதிய உறக்கம் கலைந்து
அப்பொழுது தான் விழித்திருந்த நான்
வெளியே ஓடிச் சென்று
அவளை உள்ளே வருமாறு விளிக்க
'பிறிதொரு நாள் வருகிறேன்' என
விரைந்து சென்றுவிட்டாள்.
ஒன்றும் புரியாமல்
உள்ளே சென்றுவிட்டேன் நான்...

பல வருடங்கள் கடந்து
அதே போல் மழை பெய்து
ஓய்ந்திருந்த ஒய்யார மாலைநேரம்
இன்னும் மதிய உறக்கத்திலிருந்து
எழுந்திராத என்னை
இருகரங்கள் இறுகப்பற்றி அழைத்தன.
அதே நங்கை அங்கே,
உற்சாகத்துடன் எழுந்து
அவளுடன் செல்லத் துணிந்த
சில நாழிகள் கழிந்து
திரும்பி பார்க்கிறேன்
என் கட்டிலை...
சுற்றி குடும்பத்தார் கதறிக் கொண்டிருக்க
இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் நான்,
தலைமாட்டில் ஒரு அகல்விளக்குடன்...

No comments:

Post a Comment