Wednesday 24 February 2010

சீறும் சிங்கம் சச்சின்

சச்சினின் இப்படி ஒரு ஆட்டத்திற்காக மொத்த நாடே காத்து கிடந்தது. அந்த இனிய நிகழ்வு இன்று குவாலியரில் அரங்கேறியது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முதன் முறையாக ஒருவர் இரட்டைச் சதம் அடித்திருக்கிறார். அந்த சாதனையை படைத்தது ஒரு இந்தியர் என நினைக்கும் பொழுது நெஞ்சம் பெருமிதம் கொள்கிறது.

இன்னும் போட்டி முழுதாக முடியவில்லை. இருப்பினும் என்னால் சச்சினை பற்றி உடனே எழுதாமல் இருக்க முடியவில்லை. நாளை பல பத்திரிகைகளும், என்னை போன்ற வலை மனை எழுத்தாளர்களும் சச்சினை மெச்சிக் கொண்டிருப்பார்கள். ஆனால முதல் மரியாதை எனதாக இருக்க இந்த ரசிகனுக்கு ஒரு சின்ன ஆசை. போட்டி முடிவை பற்றியெல்லாம் எவனுக்கு அக்கறை. தென் ஆப்பரிக்கா நானூற்றி சொச்சம் ரன்களையே துரத்திச் சென்று உலகின் நம்பர் 1 அணியான ஆஸ்திரேலியாவை தோற்கடித்தவர்கள். போட்டியின் முடிவு எப்படி இருப்பினும் சச்சினின் சாதனை ஒரு வரலாற்றுச் சிறப்பு.

சென்னையில் 1997'இல் சயீத் அன்வர் 194 ரன்கள் குவித்த பொழுது ஏற்பட்ட அவமானக் கரையை இன்று துடைத்தெரிந்திருக்கிறார். என்னவொரு மகத்தான நாள். முன்னே ஓர் நாள் சச்சின் 186  ரன்கள் குவித்த தினம் இவர் அன்வரின் சாதனையை முறியடிக்க மாட்டாரா என ஒவ்வொரு ரன்னுக்கும் கணக்கு பண்ணி கொண்டிருந்தேன் நான். இத்தனைக்கும் எனக்கு கிரிக்கெட்டின் மேல் அவளவாக ஈடுபாடு இல்லை. யாரவது ஸ்கோர் சொன்னால் காதில் போட்டுக் கொண்டு போய் விடுவேன். ஆனால் 1997'ஆம் ஆண்டு அன்வரின் 194, இந்தியாவின் பந்து வீச்சையும், முக்கியமாக பீல்டிங்கை குறை சொல்லும் காலமாக மாற்றியது. எத்தனை கேட்ச்சுகள் கோட்டை விட்டிருப்போம் அன்று. எத்தனை ரன் அவுட்டுகள் விட்டிருப்போம்.

இன்று அன்வரின் சாதனையையும், சச்சினின் சாதனையையும் தராசில் நிறுத்திப் பார்க்கிறேன். எவ்வளவோ மாறுதல்கள் வந்துவிட்டன ஒரு நாள் கிரிக்கெட் விளையாட்டில் இன்று. அன்வரின் பக்கம் இது சாதகமாக இருந்தாலும் இருப்பினும் சச்சினின் விளையாட்டில் ஒரு பிழை கூட இல்லை. அன்று அன்வர் பல பிழையுடன் விளையாடினார். நம்மவர்களின் பீல்டிங் சரியில்லாத காரணத்தால் அவ்ளோ பெரிய ஸ்கோர் எடுக்கும் நிலை ஆயிற்று. இவ்வளவு வயதிலும் அத்தனை சிரத்தையுடன் தனக்கே உரிய பாணியில் சச்சின் அடித்த இரட்டைச் சதம், தன் தரத்தால் தராசில் எடை கூடி கீழே சென்று விட்டது. 1997'இல் அன்வர் செய்த சாதனையை சமீபத்தில் ஒரு ஜிம்பாப்வேகாரர் சமன் செய்துள்ளார். ஆனாலும் அந்த மாட்ச்சில் வங்காள தேசம் வெற்றி பெற்றது. அதனால் அவர் சாதனையை இங்கே நான் கருத்தில் கொள்ளவில்லை.

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது எனும் பழமொழிக்கு சிறந்த உதாரணம் நம் சச்சின். கிரிக்கெட் உலகில் பல ஜாம்பவான்களில் ஒருத்தராக மட்டுமே இருந்த சச்சின், இன்று இந்த சாதனையால் தனித்து நிற்கிறார். மனதி ஒரே ஒரு சின்ன வருத்தம். அன்வர் சாதனை படைத்த அதே சென்னையில் சச்சினும் சாதனை படித்திருந்தால் மனதுக்கு ஒரு இதமாக இருந்திருக்கும்.

சச்சின் விளையாடவே தேவை இல்லை. சும்மா வந்து நின்றாலே போதும், அரங்கம் அதிரும். வேற ஒரு வீரர் செரியாக விளையாட வில்லை என்றால் அவரை வசை பாடும் நம் நாவு சச்சினை பற்றி மட்டும் பேச எழாது. அவ்வளவு செல்லம் அவருக்கு. வயதானாலும் சிங்கம் சிங்கம் தான் என இன்று நிரூபித்திருக்கிறார். சிங்கம் இன்னும் உறுமிக்கொண்டு தான் இருக்கும். மேலும் பல சாதனைகளை நாம் காணத்தானே போகிறோம். வாழ்க இந்தியாவின் செல்லப் பிள்ளை சச்சின்...

1 comment:

  1. வேற ஒரு வீரர் செரியாக விளையாட வில்லை என்றால் அவரை வசை பாடும் நம் நாவு சச்சினை பற்றி மட்டும் பேச எழாது. அவ்வளவு செல்லம் அவருக்கு//

    unmaithaan, :)

    ReplyDelete