Tuesday, 27 July 2010

ஒரு ஆண் தாயின் தாலாட்டு...


ஆராரோ ஆரீரரோ 
பூமகளே கண்ணுறங்கு,
வானத்து விண்விளக்கே
விழிமூடி நீயுறங்கு...

சூரியனார் வம்சமடி
சிணுங்காம கண்ணுறங்கு,
சோழர்குல மாணிக்கமே
சீக்கிரமா நீயுறங்கு...

நிலாவத் தான் புடிச்சிவர
உங்க அப்பாரு போயிருக்கார்,
விடியும் முன்னே நீயுறங்க 
வந்திடுமே நிலவும் இங்கே...

(ஆராரோ ஆரீரரோ)

நாடாள பிறந்தவளே
நிம்மதியா கண்ணுறங்கு,
பாராளும் காலம் வரும் 
பகட்டில்லாம நீயுறங்கு...

வானவில்லின் தேர் ஏறி
வானத்தையும் வென்றிடலாம்,
இன்று மட்டும் கண்ணுறங்க
நாளை முதல் உன் ஆட்சியடி...

(ஆராரோ ஆரீரரோ)

நேத்தைக்கு தான் இம்சை பண்ண
இன்னைக்குமா அதே கதை,
முடியலடி உங்கம்மாவுக்கு 
தூங்கி போடா என் பட்டுகுட்டி...

நாள் பூரா வேலைசெஞ்சு 
ஒடுங்கி போய் வந்திருக்கேன் ,
இதுக்கு மேலையும் படுத்தாம 
தூங்கி போடி என் செல்லகண்ணு...

(ஆராரோ ஆரீரரோ)

Tuesday, 20 July 2010

பரிமாறிய என் இதயம்



என் இமைகள் தேடி நீ கொடுத்த
முத்தச் சத்தம் ஓய்ந்திருக்கவில்லை,
உன் இதழ்கள் தேடி நான் பதித்த
முத்த ஈரம் காய்ந்திருக்கவில்லை,
ஆனால் நேற்று பரிமாறிக் கொண்ட 
நம் இதயத்தில் ஒன்று மட்டும்
ஏனோ சத்தம் இல்லாமல் நின்று விட்டிருந்தது.


காரணம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்
இந்த கயவன் செய்த செயலை அறியாமல்...
பழுதாய் போன 
இந்த கயவனின் இதயத்தை 
காதல் கடனாய் பெற்றாய்,
அது கஷ்டப்பட்டு துடித்து
இன்று ஒரு வழியாய் நின்றும் விட்டது
உன் இதயம் மட்டும்
என்னுளே இன்னும் பத்திரமாய்...

நான் வாழும் சொற்ப காலமும்
நினைவில் கொள்வேன்
பறித்துக் கொண்ட 
உன் இதயத்தின் பாவத்தையும்
பறி கொடுத்த
என் இதயத்தின் தவறையும்....

Monday, 5 July 2010

என் காதலியின் காதலன்



நீ விரும்பிய பாடல்களை
தேடி பிடித்து கேட்டிருக்கிறேன்,
நீ விரும்பிய படங்களை
ஆர்வமாய் பார்த்திருக்கிறேன்.
நீ சிரித்த 
நகைச்சுவைக்கு சிரித்து,
நீ அழுத
நேரங்களில் அழுதிருக்கிறேன்...

உன் ரசனையும்
என் ரசனையும்
ஒன்றென உனக்கு
புரிய வைக்க போராடியிருக்கிறேன்.
உனக்கு பிடித்தவனை
நீ கண்ட நாள் வரை...

என் போராட்டம்
உனக்கு புரியாமலே போய்விட்டது.
குற்றஞ் சொல்லவில்லை நான்,
குமுறிக் கொள்கிறேன்
மனதினுள்ளே...

உனக்கானவன் நானில்லை
என்றறிய மனம் மறுக்கிறது,
உனக்கு பிடித்தவனை
ஏற்க முடியாமல் தவிக்கிறது.
முதல் தடவையாய்
நம் ரசனை வேறுபடுகிறது.

என்னை வைக்க வேண்டிய இடத்தில்
இன்னொருவனை வைக்கிறேன்
புரிந்து கொள்ளடா
என் மட மனமே!!!
என் காதலியின் காதலன்
எனக்கு நண்பன்.
கடைசி வரை
எங்களின் ரசனை
ஒன்றாகவே இருக்கட்டும்...

Monday, 21 June 2010

ராவணன் - என் பார்வையில்


விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ப்ரித்விராஜ், பிரபு, கார்த்திக், ரஞ்சிதா, ப்ரியாமணி என பெரிய நட்சத்திர பட்டாளத்தை களமிறக்கி சிரத்தையுடன் மணிரத்னம் இழைத்திருக்கும் சித்திரம் தான் ராவணன். இந்த வருடத்தில் மிக பெரிதாக எதிர்பார்க்கப் பட்ட படங்களில் ஒன்று. எல்லாரும் எதிர்பார்த்தது போல மிகவும் பழகிய ஒரு கதை களம். A.R.ரஹ்மானின் சிறந்த இசை விருந்துடன் ஒரு திரை காவியம்.

எடுத்த எடுப்பிலேயே Police வண்டிகளை தாக்குதல், கூடாரத்தை அழித்தல், ஆள் கடத்தல் என படம் வேகம் எடுக்கிறது. தலையும் புரியாமல் வாலும் புரியாமல் பார்க்கும் நமக்கு குழந்தைக்கு பாடம் சொல்வது போல் கதை சொல்கிறார் மணிரத்னம். திரைக்கதை பின்னல் மிகவும் பலமாய் இருப்பதால் கதையை பற்றி பெரிதும் கவலை படாமல் "என்ன தான் அப்படி ஒரு Modern ராமாயணம்?" என ஆர்வமாய் நாம் பார்க்க துவங்கும் நேரத்தில் தான் வீராவின் வீர சாகசங்களும், ராகினியின் போராட்டமும், தேவ்'இன் Police நடவடிக்கைகளும் என அல்லோல  கல்லோலப்பட்டு விடுகிறோம் நாம். ராகினியின் தைரியத்தையும் துணிச்சலையும் பார்த்ததும் மனதில் மெல்ல ஒரு ஓரமாய் காதல் பூக்கிறது வீராவுக்கு. தப்பிக்க முயற்சி செய்யும் ராகினியை இழுத்து கொண்டு ஒவ்வொரு இடமாய் செல்கிறார் வீரா. அவரை பின் தொடர்ந்து தேவ்'உம் அவரது STF Police படையும்.

விக்கிரமசிங்கபுரம் - திருநெல்வேலி பக்கமாய் இருக்கும் இந்த ஊரைய கட்டி அல்லும் பெரிய தலை தான் 'வீரா' என்கிற 'வீரய்யா'. இதை தட்டி கேட்க வரும் பொறுப்பான Police அதிகாரியான தேவ் பிரகாஷ் வீராவின் தங்கை திருமணத்தின் போது, வீராவை சுடுகிறார். தப்பித்த வீராவை தேடும் Police வீராவின்  தங்கை வெண்ணிலாவை காவல் நிலையத்திற்கு இழுத்து சென்று உருக்குலைத்து அனுப்பி வைக்கிறது. இதை கண்டு பொங்கி எழுந்து தான் தேவி'இன் மனைவி ராகினியை கடத்துகிறார் வீரா. இதை தான் இடைவேளைக்கு பிறகு வரும் Flashback காட்சிகள் விளக்கமாய் உரைக்கின்றன.

பல போராட்டங்களுக்கு பிறகு தான் தம்பியை கொன்ற தேவ்' இடமே ராகினியை தந்துவிட்டு தப்பி செல்கிறார் வீரா. 14 நாட்களாய் வேறொரு ஆடவனுடன் இருந்த தன் மனைவியை சந்தேகப்படுகிறார் தேவ். இதை கண்டு கொதித்தெழும் ராகினி வீராவிடமே திரும்பி செல்கிறார். வீரா ராகினியை ஏற்று கொண்டாரா? வீராவுக்கு என்ன ஆயிற்று? தேவ் வீராவை பிடித்தாரா இல்லையா? என்பது தான் Climax.

இது சில மாற்றங்கள் நிறைந்த ஒரு நவீன கால ராமாயணம் என கொண்டால் அவர்களின் Start cast இதோ:


ராமன் - ப்ரித்விராஜ் - தேவ் பிரகாஷ்
சீதை - ஐஸ்வர்யா ராய் பச்சன் - ராகினி
ராவணன் - விக்ரம் - வீரய்யா
கும்பகர்ணன் - பிரபு - சிங்கராசன்
விபீஷணன் - முன்னா - சர்க்கரை
சூர்பனகை - ப்ரியாமணி - வெண்ணிலா
ஜடாயு - ஜான் விஜய் - ஹேமந்த் குமார்
ஹனுமான் - கார்த்திக் - ஞான பிரகாசம்


Forest Officer'ஆய் வரும் கார்த்திக், சிங்கராசுவாய் வரும் பிரபு, பிரபுவின் மனைவியாய் ரஞ்சிதா, வீரவின் தங்கையை வரும் ப்ரியாமணி என அனைவரும் தன் பங்கை செவ்வனே செய்திருக்கிறார்கள். சர்க்கரையை வரும் முன்னாவும், ஹெமந்தாய் வரும் ஜான் விஜயும், அரவாணியாய் வரும் வையாபுரியும் கூட சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.


இசை புயலின் தயவால் பாடல்கள் அனைத்தும் அருமை. "கள்வரே" பாடல் எனக்கு கேட்க்கும் போது பிடிக்கவில்லை என்றாலும் பார்க்கும் போது பிடித்து விட்டது. அருமையான நடனம். ஆனால் அவர் ரொம்பவே "Drums" சிவமணியை இந்த படத்தில் பயன்படுத்திவிட்டார். பல இடங்களில் நன்றாய் இருந்தாலும் சில இடங்களில் தலை வலிக்கிறது. போதாகுறைக்கு விக்ரம் வேறு "பக் பக் பக் பக்" என கூவி "கந்தசாமி"யை நினைவுபடுத்துகிறார். Climax'இல் இரண்டு பாடல்கள் புதிதாய் இடம் பெற்றுள்ளன. ஒன்று "கலிங்கத்து பரணி" பாடல், மற்றொன்று "நான் வருவேன்" என இசை புயலின் உருக்கும் குரலில். அந்த கடைசி பாடலுடன் படம் முடியும் போது மனதில் ஒரு அழுத்தம். V.மணிகண்டன் மற்றும் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் இந்தியாவா இது என நாம் வியக்கும் வண்ணமாய் இருக்கிறது காட்சிகள். ஆனால் ஒரே ஈரமாய் இருக்கிறது படம் முழுதும். ஈரம்-2 என வைத்திருக்கலாமோ?



ஐஸ்வர்யா அவர்களின் ஆடை அலங்காரம் படு கேவலம். அந்த கொடுமையை என் வாயால் சொல்ல முடியாது. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். சுகசினியின் வசனங்களில் ஆழம் இல்லை. ராகினியின் வீரத்தை பார்த்து பிரமிக்கும் வீரா அவர் மாற்றான் மனைவி என்பதை மறந்து தன்னை திருமணம் செய்ய சொல்லி கேட்கிறார். அதற்கான வசனம் "எங்களோடவே தங்கிடுறீயலா?". மணிரத்னம் எழுதி இருந்த இந்த வசங்களின் ஆழமும் அர்த்தமும் வேற. அவரது படங்களின் பலமே குறைவான ஆழமான பாதி வசனங்கள் தான். மணிரத்தினம் படங்களில் அவர் மனைவி தலையிடலாம் ஆனால் அது இப்படி சொதப்பி வைக்காத வரை மட்டுமே.

மணிரத்னத்தின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று. ஆனால் கண்டிப்பாக முதல் இடம் இல்லை. மௌன ராகம், நாயகன், தளபதி...என பெரிய வரிசையில் கடைசிக்கு கொஞ்சம் முன்னே வரக்கூடும், அவ்வளவே. ஏனைய இயக்குனர்களுடன் Compare செய்தால் இது இந்த வருடத்தின் சிறந்த படங்களில் ஒன்று.

Tuesday, 15 June 2010

உன்னை நான் சந்தித்தேன்


உற்றார் உறவினர் புடைசூழ
வந்தேன் உன்னை காண
எங்களை உபசரித்தே ஓய்ந்துவிட்ட
உன் தந்தை
உன் பெருமை பாடியே அயர்ந்துவிட்ட
உன் தாய்
என் கேள்விக்கணைகளுக்கு முன்னமே பதில்
தந்து விட்ட உன் தங்கை
இதற்கும் மேலாக
என் வீட்டு படை வேறு...
நம்மை பேசவே விடமாட்டார்களோ என்
நினைத்த நேரம் ஒரு தெய்வ குரல்
"பொண்ணு கிட்ட ஏதாவது பேசணுமா?"
என்றொலிக்க உயிர் பெற்ற நான்
மெல்ல தலை அசைத்து வைத்தேன்.

அடுத்த நிமிடம் முற்றத்தில் தனியே நாம்.
கேள்விகள் அனைத்திற்கும்
பதில் கிடைத்து விட்ட நிலையில்
ஒற்றை கேள்வியுடன் நிற்கிறேன்.
சில நிமிடங்கள் மௌனத்திற்கு பின்
"மணிக்கொரு முத்தம் தருவாயா?"
இரு வினாடிகள் உன் கண்கள்
என் கண்களை சந்திக்க,
உன் செவ்விதழ்கள் பிரிந்து
"நொடிக்கொன்று தருவேன் சம்மதமா"
என்றாய் நாணத்துடன்.

விழி கணையாலும் சொற்கணையாலும்
தாக்குண்ட நான்
சுதாரித்து வெளியே தாழ்வாரத்தே இருந்த
என் புதுப் பெற்றோரிடம்
"சம்மதம்" என்றேன்
முற்றத்தில் இருந்த உனக்கும் கேட்கும்படியாக...

Thursday, 20 May 2010

கவிதையான காதல் கதை - எப்படி ஆரம்பித்தது?

பள்ளி காலம் முடிந்து
பருவ காலமாய் ஆரம்பித்தது
அந்த கல்லூரி வாழ்க்கை
முதல் நாளே பார்த்த உன்னை
மனதில் பதிக்க வெகு நாளாகவில்லை
ஒரே வகுப்பிலிருந்தும்
ஒரு வருடம் பேசிக் கொள்ளவேயில்லை...
பின்பு ஒரு நாள்
என்னைப் பார்த்து மெல்லிதாய் சிரித்தாய்
அன்றே புது ஜென்மம் எடுத்தேன்,
கல்லூரி முடிந்த மாலை வேளைகளில் இறந்து
மறுநாள் காலை வேளைகளில் பிறந்தேன்...

ஒரு நாள் எதற்காகவோ பேசிக் கொண்டோம்
பின்னர் பழக அரமபித்தோம்...
அது என்ன மாயமோ தெரியவில்லை,
ஊரெல்லாம் வாய் பேசும் நான்
உன்னிடும் மட்டும் வார்த்தை வராமல் தவித்தேன்
புரிந்து கொண்டேன் இது காதல் என்று
நட்பை கொச்சை படுத்தாமல்
நடந்து கொள்ள போராடினேன்
ஒன்றாய் சிரித்தோம்,
ஒன்றாய் அழுதோம்
காலங்கள் சென்றன
நம் காதலும் வலு பெற்றது
ஆனால் சொல்லத்தான் இயலவில்லை
என்னிடம் நீயும் உன்னிடம் நானும்...

Tuesday, 11 May 2010

கவிதையான காதல் கதை - காதல் கோழை


எத்தனை முறை உன்னையே
சுற்றி சுற்றி வந்திருப்பேன்
அட, நம் ரசனை ஒன்றாய் இருக்கிறதென
உன்னிடம் எத்தனை முறை வியந்திருப்பேன்
சில சமயம் உண்மையாக
பல சமயங்களில் பொய்யாக...

நாம் தனியே நேரம் செலவிட
எவ்வளவு முயன்றிருப்பேன்...
நீ எனக்கு முக்கியமானவள் என
எத்தனை தடவை புரிய வைத்திருப்பேன்...
எல்லாம் தெரிந்தே என்னுடன் பழகி
அறிந்தும் அறியாததும் போல
நடந்து கொண்டாய்...
இதற்கே தரலாமடி
உனக்கொரு செவாலியே விருது...

சொல்லத் துணிவிருந்தால் தான்
எப்பவோ சொல்லி இருப்பேனே
இப்படி என் மனதிடம்
ஒவ்வொரு நாளும்
வசை வாங்கிக் கொண்டிருக்க மாட்டேனே.
கொஞ்சம் உன் நிலை இறங்கி வந்து
உன்னை காதலிக்கிறேன் என்று
இந்த காதல் கோழையிடம்
சொல்லி விட்டுத் தான் போயேன்
புண்ணியமாய் போகும் உனக்கு...

Tuesday, 4 May 2010

சுறா - என் பார்வையில்


என் room mate ஏதோ ஓசியில கூட்டிட்டு போறாரேன்னு நம்பி போனேன். மீதி freinds'லாம் "அட மக்கா, அந்த படமா...வேணாம்டா"னு படிச்சு படிச்சு சொன்னனுவளே. நான் எங்க கேட்டேன். 'ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்டர மாதிரின்னு' சொல்லிட்டு போயிட்டேன். அங்க போய் பாத்தா தான் தெரியுது பய புள்ள எல்லாரையும் வளச்சி வளச்சி குத்திருக்காய்ங்கன்னு. "ஐயோ ராமா, இந்த மாதிரி கழிசடை பசங்க கூடலாம் என்னை ஏன் கூட்டு சேர வைக்கற"ன்னு பொலம்பிட்டே வெளிய வந்தேன். மத்த post'ல சொன்ன மாதிரி இதுல கதைன்னு சொல்ல ஒன்னுமே இல்லையே. இருந்தாலும் try பண்றேன்.

'யாழ் நகர்' குப்பத்துக்கே செல்லப் பிள்ளை நம்ம 'சுறா'. தன்னுடைய கள்ளக்கடத்தல் தொழிலுக்கு உதவியாக இருக்கட்டும்னு கள்ள வோட்டுல மந்திரியானவர் தான் வில்லன். இவங்க life cross ஆகும் போது என்ன நடுக்குதுங்க்றது தான் matter. குப்பத்த காலி பண்ணிட்டு அங்க theme park கட்ட plan போடறாரு minister. ஆனா minister பணத்துலையே அங்க தன் குப்பத்து ஜனங்களுக்கு வீடு கட்டி தராரு சுறா. இதெல்லாம் ஏற்கனவே எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு இல்ல. அட விடுங்கப்பா இந்த கான்செப்ட் தானே பார்த்திபன்ல இருந்து நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி வரைக்கும் நடிச்சு பெரிய ஆள் ஆகி இருக்காங்க. அதுக்காக விஜயும் அதே ஸ்டைல follow பண்ணனுமான்னு நீங்க கேக்கறது என் காதுல விழுது.ஹ்ம்ம்...என்ன பண்றது எல்லாம் நேர கொடுமை..

தல தான் அசல்னு ஒரு குப்பை படத்த கொடுதிட்டார்னு feel பண்ணிக்கிட்டு இருக்கற நேரத்துல இங்க அத விட ஒரு கொடுமை. கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம்'ங்கற மாதிரி ஆகிபோச்சு நெலமை. என்ன தமிழ் மக்களை பாத்தா இளிச்சவாய் பசங்களா தெரியுதா? நீங்க குப்பை படமா release பண்ணிட்டே இருப்பீங்க நாங்க அத காசு கொடுத்து தியேட்டர்ல போய் பாக்கணுமா? இப்படிலாம் படம் எடுத்தா ஏன் எல்லாரும் திருட்டு வீசீடீல படம் பாக்கமாட்டான். நான் தெரியாம தான் கேக்குறேன் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மனசாட்சியே இல்லையப்பா. குர்காவூன்ல இது நாள் வரைக்கும் அமைதியா படம் பாத்தேன். இன்னைக்கு என்னடான்னா அவ்ளோ சேட்டை, கும்மாளம், கூச்சல்....இதுல என் room mate'க்கு சந்தோசம் வேற. "பாத்தியா, எங்களுக்கு எவ்ளோ support'னு? ஸ்ஸ்சப்ப்ப்பா....இப்பவே கண்ணா கட்டுதேனு ஆகி போச்சு போன பத்து நிமிஷத்துல.

விஜய்க்குனு சில கேள்விகள் வெச்சிருக்கேன்...
  • உங்களுக்கு 50'வது படம் எடுக்க வேற கதையே கெடைக்கலியா?
  • உங்க ரசிகர்கள் மட்டும் பாக்கவா படம் நடிக்கறீங்க? (பாவம் producer'னு கூட சொல்ல முடியாது. ஒரு வேளை Income tax கணக்கு காட்ட தான் இந்த மாதிரி படம் எடுக்கறாங்களோ?!)
  • பெரிய ஹிட் எதுவுமே கொடுக்காத ஒரு director கிட்ட எப்படி படம் பண்ணலாம்னு முடிவு பண்ணீங்க? (நீங்க சொல்ற மாதிரிலாம் சீன்ஸ் அண்ட் சாங்க்ஸ் வைப்பாருன்னா)
  • ஆமா, வர வர எல்லா படத்துலயும் இந்த பல்ல கடிச்சிட்டே பேசறீங்களே..அது என்னங்கணா அது, ஸ்டைலா? (சகிக்கல)
  • அந்த கோர்ட் சீன்ல என்னமோ பண்ணீங்களே என்னது அது? ஓ, அதுக்கு பேர் தான் modulation'அ...அட கடவுளே, அட கடவுளே...
  • அப்பரம் அந்த பொம்மாயி பாட்டுல தமண்ணாவோட pant'அ புடிச்சிட்டு என்ன ஆட்டுணீங்களே, அதுக்கு பேர் என்னங்கணா? என்னது dance movement'அ...கொய்யால, வாய்ல எதாவது அசிங்கமா வந்துட போகுது...
குடும்பம் கொழந்தை குட்டியோட படம் பக்கா வராங்கலேன்னு ஒரு சின்ன அக்கறை இருந்த இப்படி பண்ணி இருப்பியா..ராஸ்கல். சின்ன புள்ள தனமா இருக்கு...அவங்க டௌசர இவரு கழட்டி கழட்டி மாட்டுவாராம். இதுக்கு பேரு dance'ஆம். "போக்கிரி"யில அசின் டிக்கியில கை வெச்சப்பவே நாலு பேர் குரல் கொடுத்திருந்தா இன்னைக்கு இந்த நெலமைக்கு போய் இருக்காது.

மணி ஷர்மா மீசிக்ல ரெண்டு பாட்டு மட்டும் கொஞ்சம் beats'ஓட இருக்கு. ஒரு பாட்டு "கும்பிட போனா தெய்வம்" ஸ்டைல்'ல பிளஸ் 4 பொண்ணுங்க ௨ piece'ல. Director Sir இப்படி ஒரு கோவில் திருவிழா நான் எங்கயுமே கேள்வி பட்டதில்லே. Hero Intro தான் கொடுமைனா, அவர் அந்த நெருப்பல இருந்து எந்தரிச்சு வர்றது அத விட கொடுமை. Hero'வ அடிச்சு போட்டது எங்கயோ, ஆனா திடீர்னு சிலைக்கு அடியில இருந்து எந்திரிப்பாராம். அது சரி, இப்படிலாம் logic பாத்தா கதையே இருக்காதே.

தமன்னாக்காக படம் பாக்கலாம்னு கூட சொல்ல முடியல. ஏன்னா வேட்டைக்காரன் அனுஷ்காவ விட இவங்களுக்கு ரொம்ப கம்மியான சீன் தான். படத்தோட டிக்கெட் காச விட popcorn பிளஸ் pepsi செலவு தான் ஜாஸ்தி. ஓசியில டிக்கெட் போட்டா சாப்ட நீ தான் தம்பி வாங்கனும்னு சொல்லாம சொல்லிட்டாரு என் room mate. ஹ்ம்ம்...அது ஒரு தனி கொடுமை. மொத்ததுல படம் முடிஞ்ச ஒடனே நான் பண்ண prayer "கடவுளே, இப்படி ஒரு பாவத்த இன்னைக்கு பண்ணினதுக்காக என்ன தயவு செஞ்சு மன்னிச்சிடு...plsss..." :(

Friday, 23 April 2010

இதுவும் காதலே...



கல்லறையில் நீ,
சிறையறையில் நான்...
தடவியல் நிபுணர்கள் சாட்சி தேடினர்
உயிரற்ற என் உடற்கூட்டை தூக்கிலிட...
எப்படியும் இவர்கள் அறியப்போவதில்லை
அந்த பாழடைந்த மாளிகையும்
அதில் அமைந்த நம் சொர்கத்தையும்...

விடுதலை பெற்று வந்தால்
என் முதல் காரியம்,
அங்கே உள்ள உன்
ரகசிய கல்லறை மேல்
என் படுக்கையறை அமைப்பேன்...
தினமும் இரவில் உன்னை அணைப்பேன்...
என்றும் நீங்காமல்
என்னுடன் இருப்பாய்
என்னைப் புரிந்து கொள்ளாத
என் காதலியே...

Tuesday, 20 April 2010

உனக்கு ஒரு தண்டனை


கருகரு குழலால் என்னை
கவிழ்த்துவிட முயன்றாய்...
நான் கவிழ்ந்தது
உன் குறுகுறு கண்களிலலடி...

துருதுரு பேச்சினில் என்னை
துவட்டி எடுத்தாய்...
நான் துவண்டது
உன் சிற்றிதழ் புன்னகையில்...

பளபளக்கும் பட்டினில் என்னை
பஸ்பமாக்கிவிட துணிந்தாய்...
நான் இடிந்ததோ
உன் கோபத்தின் சிதறலில்...

பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
நீ சிதைத்து விட்ட
எந்தன் இதயச்சிறையில்
என்றும் நீ இருக்க கடவாயாக...

Wednesday, 7 April 2010

பையா - என் பார்வையில்


அடடா, இப்படி ஒரு action படத்துக்காக தானே இவ்ளோ நாள் wait பண்ணோம். Family'யோட பார்க்க கூடிய பஞ்ச் டயலாக் இல்லாத அருமையான படம். Transporter மாதிரி இருக்கும் படம்'ன்னு யாரோ ஒருத்தன் சொன்னத நம்பி படம் பார்க்க போகாம இருந்திருந்தா லிங்குசாமியோட ஒரு action விருந்தை miss பண்ணி இருப்பேன். சரி, இப்போ கதைக்கு போவோம்.

நாலு பசங்களும் ஒரு பொண்ணும் living together ஒரே flat'ல in Bangalore. (செரி, இதெல்லாம் கண்டுகாதீங்க. Software engineer'அ எல்லா படத்துலயும் தான் கூடி வெச்சி கும்மி அடிக்கறாங்களே, என்ன பண்ண...). Room'ல எல்லாருக்கும் வேலை இருக்கு, ஆனா நம்ம ஹீரோ கார்த்திக்கு மட்டும் வேலை இல்ல. Friends'லாம் சேர்ந்து ரெண்டு மூணு வேலைக்கு arrange பண்றாங்க. ஆனா நம்ம ஹீரோ தமன்னாவ பார்த்த குழப்பத்துல எல்லாத்தையும் சொதப்பிடறார். friend'ஓட travels car'அ (Mitsubishi Lancer) எடுத்திட்டு pickup பண்ண போற நம்ம ஹீரோ, திடீர்னு தமன்னாவ pickup பண்ணிட்டு airport போறாரு. கூட வர்ற இம்சையான ஒரு மாமாகிட்டயிருந்து escape ஆகி Mumbai போகணும்னு சொல்றாங்க தமன்னா. As usual, Figure'அ பார்த்த ஒடனே friendship'அ cut பண்ணி விட்டுட்டு சந்தோஷமா புறப்படுகிறார் நம் ஹீரோ. இதுக்கு அப்புறம் தான் படத்தில விறுவிறுப்பே. காரை விட்டு கீழ இறங்கினா ஒன்னு பாட்டு இல்லனா fight தான்.

தமன்னாவ துரத்திகிட்டு ஒரு ஆந்திரா கும்பல். அங்க இருந்து escape ஆகி பொய் கிட்டே இருக்கும் பொது இன்னொரு கும்பல். என்னடான்னு பார்த்தா அது நம்ம கார்த்தி Mumbai'ல பண்ணிட்டு வந்த சேட்டையோட எதிரொலி. ரெண்டு கும்பல் கிட்ட இருந்தும் எப்படி சாமர்த்தியமா தப்பிச்சு மும்பை போறாங்க ரெண்டு பெரும், மும்பை அப்படி கார்த்தி என்ன தான் பண்ணிட்டு வந்தாரு, தமன்னா மும்பைல தன் பாட்டி கூட போய் பத்திரமா சேர்ந்தாங்களா, கார்த்தி தான் லவ் பண்ற விஷயத்த சொன்னாரா...இதெல்லாம் சேர்ந்தா தான் மீதி கதை.

படத்துல சில பல எதிர் பார்த்த twist'கள் இருக்கு. For exa: தமன்னாவுக்கு கார் ஓட்ட தெரியும்ங்கறது, கார்த்தி first time fight போடும் போது 'கில்லி' த்ரிஷா விஜய்'அ பார்த்த மாதிரி ஆச்சர்யமா பாக்கறது எல்லாம் தெரிஞ்ச கதை தான். ஆனா படத்துல பலமே screenplay'உம் Dialogues'உம் தான். சும்மா யூத்துக்கு ஏத்த மாதிரி இருக்கு. கார்த்தியோட friend'அ வர்ற பொண்ணு தெலுங்குல தான் பேசுது. Lip sync ஆகாம இருக்கும் போதே பசங்க correct'அ கண்டுபிடிச்சிடுவாங்க. தமன்னாவும் தெலுங்கு heroine தான். கார்த்தியோட 'ஆயிரத்தில் ஒருவன்' தெலுங்குல நல்ல ஹிட். Bi-lingual movie எடுக்கற ஐடியாவுல தான் ஹீரோ, heroine, கதை களம் எல்லாம் செலக்ட் பண்ணி இருக்கார் லிங்குசாமி. Brilliant Work.

விஜயோட 'வில்லு', 'வேட்டைக்காரன்', அஜித்தோட 'அசல்' மாதிரி குப்பை படங்களுக்கு மத்தியில ஒரு காதல் கலந்த action masala படம். கார்த்தி தன்னோட இந்த இமேஜ்'அ maintain பண்ணிட்டார்னா எங்கையோ போய்டுவார். சில scene'ல சிரிக்கும் போது தெலுங்கு ஹீரோ வெங்கடேஷும் சில டயலாக்ஸ் பேசும் போது நம்ம சூர்யாவும் வந்திட்டு போறாங்க நம்ம கண்கள்ல. அதுவும் கார்த்திக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் தான். யுவனோட music as usual அருமை. Action scenes 'Run' படம் மாதிரி இல்லாம கொஞ்சம் வித்யாசமா ஆனாலும் நம்புற அளவுக்கு இருக்கு. Travels car மாதிரியும் இருக்கணும் ஆனா படத்தோட concept'உக்கு ஏத்த மாதிரி பறக்கணும். Lancer நல்ல selection. Action படத்துக்கு Editing'னா Antony தான். என்னமா இருக்கு எடிட்டிங். chancey இல்ல.

Jegan'ஓட காமெடி நல்லா இருக்கு. Milind Soman'அ ஓர் அளவுக்கு use பண்ணி இருக்காங்க. ஆக மொத்ததுல அந்த படம் மாதிரி இருக்கு, இந்த படம் மாதிரி இருக்குனு சொல்லாம, கொடுத்த காசுக்கு ஒரு அருமையான படம் பார்த்தோமான்னு நெனைச்சு வீட்டுக்கு வந்து சேருங்க.

Sunday, 28 February 2010

விண்ணை தாண்டி வருவாயா - என் பார்வையில்


கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் "Young Superstar"ஆக புது அவதாரம் எடுத்திருக்கும் சிம்பு இளமை ததும்ப அழகாக வாழ்ந்திருக்கும் ஒரு காதல் கதை இது. படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் "சிம்புவா இது?" என ஆச்சர்யபட்டு, பின்னர் அவருடைய mannerism'களில் மயங்கி, அவருடைய காதல் வலி நிறைந்த வாழ்க்கையில் ஒன்றிப் போய் படம் பார்த்தவர்களில் நானும் ஒருவன். சிம்புவை எதற்கு தேர்ந்தெடுத்தார் கௌதம் என குழம்பிய சில ரசிகர்களில் நானும் ஒருவன். அனால் இப்படி ஒரு காதல் கதைக்கு இவரை விட அருமையான choice வேறு யாரும் இருக்க முடியாது.

கதை இவ்வளவு தான் - மேல் வீட்டில் ஜெஸ்ஸியின் மலையாள christian குடும்பம். கீழே வாடகை வீட்டில் கார்த்திக்கின் தமிழ் Hindu குடும்பம். பார்த்த உடனே ஜெஸ்ஸியை காதலிக்கிறார் கார்த்திக். மதம், வயது என காரணம் காட்டி காதலை மறுக்கிறார் ஜெஸ்ஸி. கார்த்திக் அவளை விடாமல் துரத்தி துரத்தி காதலிக்கிறார் நாம் கனவுகளில் காண்பது போலவே. அப்பொழுதே நம் மனதுடன் சப்பென ஒட்டிக் கொள்கிறார் கார்த்திக். ஒரு நிலையில் தனக்கும் கார்த்திக்கை பிடிக்கும், ஆனால் பல பிரச்சனைகள் வரும் அதனால் நமக்குள் காதல் வேண்டாம் என கூறி விடுகிறார் ஜெஸ்ஸி. நண்பர்களாக பழகலாம் என கார்த்திக் வெள்ளை கோடி காட்டி கேட்க, ஜெஸ்ஸி அதற்கு OK சொல்கிறார். ஆனால் நண்பராக பழக முடியாமல் இருவரும் காதலில் விழுகின்றனர். பின்னர் விஷயம் வீட்டுக்கு தெரிகிறது. அண்ணன் முதலில் சண்டை போடுகிறார். பின்னர் தந்தை வீட்டை காலி செய்ய சொல்கிறார். கல்யாணம் செய்ய கேரளாவில் இருக்கும் சொந்த ஊருக்கு செல்கிறார் ஜெஸ்ஸி. ஆனால் கல்யாணத்தை நிறுத்தி விடுகிறார். இதற்குள்ளாக Assistant Director வாய்ப்பு பெறுகிறார் கார்த்திக். சில பல குழப்பும் மிகுந்த காட்சிகளுக்கு பிறகு ஜெஸ்ஸிக்கு திருமணமாகி UK சென்று விட்டதை அறிகிறார் ஹீரோ. மனதை தேற்றி கொண்டு Director ஆகும் முயற்சியில் வெற்றி பெற்று ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படம் முடிந்து release ஆவதற்குள் நடப்பது தான் suspense நிறைந்த climax.

எனக்கு இதில் பல குழப்பங்கள் - அது எப்படி காதலை சொன்ன ஒருத்தரிடம் நண்பராக பழக முடியும் என நம்புகிறார் ஜெஸ்ஸி? இப்படி நடக்கும்னு ஒரு doubt இருக்கும் இல்ல. அப்புறம் எதுக்கு தான் allow பண்றீங்க friend'ஆ இருக்கலாம்னு? நீயும் வேணாம் உன் friendship'உம் வேணாம்னு சொல்லிட்டு போக வேண்டியது தானே. செரி விடுங்க படம் மூணு மணி நேரம் போகணும், A.R.Rehman இன்னும் ஒரு ரெண்டு பாட்டு போடணும் இல்ல. அதுக்காக மன்னிச்சு விட்ரலாம். சிம்பு சும்மா பிண்ணி எடுத்திருக்கார். கலக்கல் dance. கலக்கல் mannerism. கலக்கலான dialogue delivery. எல்லாம் கௌதம் மேனனோட கை வரிசை.  cotton saree'யில் படம் முழுக்க மிக அழகாக வந்திருக்கிறார் த்ரிஷா . அவர் நடிப்பும் மிகவும் பொருத்தம். ஆனா அவரை விட assistant director'a வர்ற பொண்ணு செம fugure'னு சொல்லாம இருக்க முடியல.

இந்த படத்தை ஒரு நிஜ அழவாக எடுத்துக் கொண்டால் எனக்கு சில காட்சிகள் பிடிக்கவில்லை என சொல்வேன். குழப்பம் நிறைந்த ஜெஸ்ஸி, அப்படி ஒரு குழப்பவாதியை துரத்தி துரத்தி காதலிக்கும் ஒரு பாவமான ஜீவன். Goa'வில் இருக்கும் நாயகனை சென்னைக்கு கட்டாயம் வருமாறு அழைக்கும் நாயகி, நமக்குள் எல்லாம் முடிந்து விட்டது என கூறுகிறார். "நீ சென்னைக்கு போகனுமானு ஒரு நொடி யோசிச்ச இல்ல" அதனாலையே எனக்கு இந்த காதல் வேண்டாம்னு சொல்ற ஜெஸ்ஸியை நல்லா பளார் பளார்னு நாலு கொடுக்கலாம் போல இருந்தது. இதென்ன காதலா இல்ல test பண்ணி வெளையாடற game'ஆ? படத்தோட அவ்ளோ ஒன்றி போயிட்டேன். அட ஏன்டா இப்படி காதல் காதல்னு சாவரீங்கன்னு கேக்கலாம் போல கூட தோனுச்சு. May be நானும் காதலிக்க ஆரம்பிச்சா இப்படி தோணாதுன்னு நெனைக்கறேன். wait பண்ணி பாப்போம். நம்மள தூக்கி போட்ற மாதிரி ஒரு காதல்வருமான்னு?

சிம்பு கூட வரும் cameraman character அருமை. comedy'க்கு நல்லாவே கை கொடுத்திருக்கிறார். காதலுக்கும் தான். கேரளாவின் இயற்கை காட்சிகளையும், நம்ம ஊர் சென்னையின் ECR, சோழிங்கநல்லூரின் beach resort, என பல  தெரிந்த இடங்களை பார்க்கும் பொழுது மனதிருக்கு இதமாகத் தான் இருக்கிறது. அமெரிக்காவின் அழகை கொஞ்சம் வித்தியாசமாக படம் பிடித்திருக்கிறார் இம்முறை. மிக சிறந்த crew. எடிட்டர் Antony'ஐ பற்றி சொல்லவே தேவை இல்லை. அருமையான வேலைகாரர். இசை புயலின் துள்ளல் படத்திற்கு பெரிய பலம். பாடல்கள் release'ஆன அப்போ ஒரு பாடல் மட்டும் தான் முதலில் பிடித்திருந்தது. But few days back, I started liking all the songs. Particularly "ஆரோமலே" song'ஓட high pitch super. சும்மாவா ரெண்டு Golden Globe கொடுத்தாங்க. இரண்டு காட்சிகளில் திடீரென எதோ ஒரு ஆங்கில பாடல் (rock song மாதிரி) பின்னணி இசையாக வந்தது மனதில் பதியவில்லை. Re-recording as usual அட்டகாசம். படத்தின் climax twist'லாம் ஓகே தான். ஆனா அதுல ஒரு சின்ன matter இடிக்குதே. ரீல் படத்தோட Hero, heroine மற்றும் crew'வோட பஸ்'ல போற scene'அ தான் சொல்றேன். படம் பாத்தவங்களுக்கு கிளைமாக்ஸ் புரிஞ்சு அதுக்கு அப்புறம் இந்த small logic problem யோசிக்க சில மணி நேரமாச்சும் ஆகும். என்ன மாதிரி கொஞ்சம் கவனிச்சும் கவனிக்காம பாத்தீங்கன்னா ஒடனே புரியும்.

எனக்கு தெரிஞ்சு theatre'ல subtitle'ஓட பாத்த முதல் படம் இது தான். நம்ம மக்களுக்கு மலையாளம் புரியாதா, இல்ல இவர் படத்துல வர்ற English dialogues யாருக்கும் புரியாதா? எதுக்கு subtitles? இன்னொரு விஷயம். படத்துல கெளதம் தன்ன தானே நக்கல் அடிச்சிருக்கார். அந்த scene கூட நல்லா இருக்கு. அட ஏன் தான் படத்துல ஒரு dialogue திரும்ப திரும்ப வருதுன்னு தெரியல. "நான் ஏன் உன்னை காதலிச்சேன்"? இந்த கேள்விய கேட்டு கேட்டு கொய்யால என்னை tension பண்ணிட்டாங்க. மொத்ததுல ஜெச்சியோட வார்த்தைகள்ல சொல்லனும்னா "It's a feel good film". என் style'ல சொன்னா, படம் பாருங்க. ஆனா அதே மாதிரி லவ் பண்ணாதீங்க. மவனே பேஜார் ஆகிடுவீங்க :D

Wednesday, 24 February 2010

சீறும் சிங்கம் சச்சின்

சச்சினின் இப்படி ஒரு ஆட்டத்திற்காக மொத்த நாடே காத்து கிடந்தது. அந்த இனிய நிகழ்வு இன்று குவாலியரில் அரங்கேறியது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முதன் முறையாக ஒருவர் இரட்டைச் சதம் அடித்திருக்கிறார். அந்த சாதனையை படைத்தது ஒரு இந்தியர் என நினைக்கும் பொழுது நெஞ்சம் பெருமிதம் கொள்கிறது.

இன்னும் போட்டி முழுதாக முடியவில்லை. இருப்பினும் என்னால் சச்சினை பற்றி உடனே எழுதாமல் இருக்க முடியவில்லை. நாளை பல பத்திரிகைகளும், என்னை போன்ற வலை மனை எழுத்தாளர்களும் சச்சினை மெச்சிக் கொண்டிருப்பார்கள். ஆனால முதல் மரியாதை எனதாக இருக்க இந்த ரசிகனுக்கு ஒரு சின்ன ஆசை. போட்டி முடிவை பற்றியெல்லாம் எவனுக்கு அக்கறை. தென் ஆப்பரிக்கா நானூற்றி சொச்சம் ரன்களையே துரத்திச் சென்று உலகின் நம்பர் 1 அணியான ஆஸ்திரேலியாவை தோற்கடித்தவர்கள். போட்டியின் முடிவு எப்படி இருப்பினும் சச்சினின் சாதனை ஒரு வரலாற்றுச் சிறப்பு.

சென்னையில் 1997'இல் சயீத் அன்வர் 194 ரன்கள் குவித்த பொழுது ஏற்பட்ட அவமானக் கரையை இன்று துடைத்தெரிந்திருக்கிறார். என்னவொரு மகத்தான நாள். முன்னே ஓர் நாள் சச்சின் 186  ரன்கள் குவித்த தினம் இவர் அன்வரின் சாதனையை முறியடிக்க மாட்டாரா என ஒவ்வொரு ரன்னுக்கும் கணக்கு பண்ணி கொண்டிருந்தேன் நான். இத்தனைக்கும் எனக்கு கிரிக்கெட்டின் மேல் அவளவாக ஈடுபாடு இல்லை. யாரவது ஸ்கோர் சொன்னால் காதில் போட்டுக் கொண்டு போய் விடுவேன். ஆனால் 1997'ஆம் ஆண்டு அன்வரின் 194, இந்தியாவின் பந்து வீச்சையும், முக்கியமாக பீல்டிங்கை குறை சொல்லும் காலமாக மாற்றியது. எத்தனை கேட்ச்சுகள் கோட்டை விட்டிருப்போம் அன்று. எத்தனை ரன் அவுட்டுகள் விட்டிருப்போம்.

இன்று அன்வரின் சாதனையையும், சச்சினின் சாதனையையும் தராசில் நிறுத்திப் பார்க்கிறேன். எவ்வளவோ மாறுதல்கள் வந்துவிட்டன ஒரு நாள் கிரிக்கெட் விளையாட்டில் இன்று. அன்வரின் பக்கம் இது சாதகமாக இருந்தாலும் இருப்பினும் சச்சினின் விளையாட்டில் ஒரு பிழை கூட இல்லை. அன்று அன்வர் பல பிழையுடன் விளையாடினார். நம்மவர்களின் பீல்டிங் சரியில்லாத காரணத்தால் அவ்ளோ பெரிய ஸ்கோர் எடுக்கும் நிலை ஆயிற்று. இவ்வளவு வயதிலும் அத்தனை சிரத்தையுடன் தனக்கே உரிய பாணியில் சச்சின் அடித்த இரட்டைச் சதம், தன் தரத்தால் தராசில் எடை கூடி கீழே சென்று விட்டது. 1997'இல் அன்வர் செய்த சாதனையை சமீபத்தில் ஒரு ஜிம்பாப்வேகாரர் சமன் செய்துள்ளார். ஆனாலும் அந்த மாட்ச்சில் வங்காள தேசம் வெற்றி பெற்றது. அதனால் அவர் சாதனையை இங்கே நான் கருத்தில் கொள்ளவில்லை.

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது எனும் பழமொழிக்கு சிறந்த உதாரணம் நம் சச்சின். கிரிக்கெட் உலகில் பல ஜாம்பவான்களில் ஒருத்தராக மட்டுமே இருந்த சச்சின், இன்று இந்த சாதனையால் தனித்து நிற்கிறார். மனதி ஒரே ஒரு சின்ன வருத்தம். அன்வர் சாதனை படைத்த அதே சென்னையில் சச்சினும் சாதனை படித்திருந்தால் மனதுக்கு ஒரு இதமாக இருந்திருக்கும்.

சச்சின் விளையாடவே தேவை இல்லை. சும்மா வந்து நின்றாலே போதும், அரங்கம் அதிரும். வேற ஒரு வீரர் செரியாக விளையாட வில்லை என்றால் அவரை வசை பாடும் நம் நாவு சச்சினை பற்றி மட்டும் பேச எழாது. அவ்வளவு செல்லம் அவருக்கு. வயதானாலும் சிங்கம் சிங்கம் தான் என இன்று நிரூபித்திருக்கிறார். சிங்கம் இன்னும் உறுமிக்கொண்டு தான் இருக்கும். மேலும் பல சாதனைகளை நாம் காணத்தானே போகிறோம். வாழ்க இந்தியாவின் செல்லப் பிள்ளை சச்சின்...

Tuesday, 9 February 2010

யார் அவள்?


மழைபெய்து ஓய்ந்திருந்த
மயக்கும் மாலை வேளையில்
மழையில் முழுதாய் நனைந்துவிட்ட
மங்கை ஒருத்தியை என்
மனை வாசலில் கண்டேன்..
மதிய உறக்கம் கலைந்து
அப்பொழுது தான் விழித்திருந்த நான்
வெளியே ஓடிச் சென்று
அவளை உள்ளே வருமாறு விளிக்க
'பிறிதொரு நாள் வருகிறேன்' என
விரைந்து சென்றுவிட்டாள்.
ஒன்றும் புரியாமல்
உள்ளே சென்றுவிட்டேன் நான்...

பல வருடங்கள் கடந்து
அதே போல் மழை பெய்து
ஓய்ந்திருந்த ஒய்யார மாலைநேரம்
இன்னும் மதிய உறக்கத்திலிருந்து
எழுந்திராத என்னை
இருகரங்கள் இறுகப்பற்றி அழைத்தன.
அதே நங்கை அங்கே,
உற்சாகத்துடன் எழுந்து
அவளுடன் செல்லத் துணிந்த
சில நாழிகள் கழிந்து
திரும்பி பார்க்கிறேன்
என் கட்டிலை...
சுற்றி குடும்பத்தார் கதறிக் கொண்டிருக்க
இன்னும் ஆழ்ந்த உறக்கத்தில் நான்,
தலைமாட்டில் ஒரு அகல்விளக்குடன்...

Thursday, 4 February 2010

சொல்லாத காதல்


 உனக்காக பல செய்த நான்
எனக்காக வேணும்
என் காதலை சொல்லியிருக்க வேண்டும்...
உனக்காக சில செய்த நீ
எனக்காகவே
உன் காதலை நீயாவது சொல்லியிருக்கலாம்...

சொல்லிக்கொள்ளாத நம் காதல்
காலத்தால் கரைந்து விட,
இன்று கல்லறையில் சந்திக்கின்றோம்
நாலு சமாதி தாண்டி...
என் மனைவியும்
உன் கணவனும்
நம் காலடிகளில் அழுவதை
காண சகியாமல்
இங்கே பல உயிர்கள்
புதைந்து இருக்கின்றன...

இன்று உணர்கிறேன்
சொல்லாத காதலால்
காதலர்கள் மட்டுமல்ல
இன்னும் பிற உயிர்களும் அல்லவா
பாதிக்கப்பட்டு விட்டன..

Monday, 1 February 2010

காதல் என்றால் - Goa

 Goa திரைப்படத்தில் இருந்து எனக்கு மிகவும் பிடித்த ஒரு வலி நிறைந்த பாடல் இதோ...



பாடல் வரிகள்:

இதுவரை இல்லாத உணர்விது,
இதயத்தை துண்டாக்கும் நினைவிது
மனதினை மண்ணோடு புதைத்திடும்
பெண்ணை நம்பாதே....

காதலி என்றால் அத்தனையும் கனவு
கண்மூடியே வாழ்கின்ற உறவு,
பெண்கள் என்றால்
ஆணை கொள்ளும்
நோய் ஆனதே...

ஐயோ, இந்த இளமையின் தொடக்கம்
இன்றே முற்றுபுள்ளி
அதை சொல்லாமல் சொல்லி
நம்மை பைத்தியமாக்கும்
பெண்ணைத் தேடி தொலையாதே...

என் உறக்கம் கலைத்தவள்



சிறு வயதில் உண்டான காதல் இது,
இதயத்தில் எழவில்லை என்றாலும்
உள்ளேபுக வெகுநாட்கள் ஆகவில்லை...
காதலில் ஆரம்பித்து
கல்யாணத்துடன் தொடர்கிறது என் கதை...

அன்று காதல் நினைவுகளால்
என் உறக்கம் கலைத்தவள்,
இன்று மனைவியான பின்னும்
மறக்காமல் கலைக்கிறாள்
என் உறக்கத்தை
தன் குறட்டை ஒலியால்...

பல மாதங்களாய்
புதுமனைவியின் இந்த இன்னலை
பொறுத்து வரும் நான்
இன்று புயலாணேன்...
என் பக்கத்தே புரண்டு படுத்தவளை
இழுத்தணைத்து
இதழ்களை இருட்டில் தேடி
அழுத்தமாய் முத்தமொன்றை பதித்தேன்!
செல்ல சிணுங்கலுடன்
கண்ணிமைகள் படபடத்து
மீண்டும் உறங்கத் தொடங்கியவளிடம்
குறட்டைச் சத்தம் குறைந்திருந்தது...

மிகப் பெரிய மருத்துவச் சாதனை
செய்துவிட்ட மகிழ்ச்சியில்
உறங்கச் சென்றேன் நான்
பலத்த குறட்டையுடன்,
மனைவியும் மருந்து கண்டுபிடிக்கட்டுமே என்று ;)

Sunday, 24 January 2010

இயற்கை குழந்தை



Visibility பூஜ்ஜியமென வீதியெங்கும் பேச்சு...
வழியெங்கும் வியாபித்திருக்கும்
வெள்ளைப் பணிக்குடையை
வர்ணிக்க ஆளில்லை,
வசைக்க மட்டும் ஆயிரம் பேர்...

மாலைச் சூரியன் மறைந்ததும்
கூட்டினில் அடைந்திடும் குஞ்சுபோல்
வீட்டினில் வந்து சேர்ந்து
பாரினில் நடந்த கதைபல பேசி
ஊனுக்கு உணவிட்டு
உறங்கச் சென்ற கரிகாலன் காலத்திலும்
பனிக்காலம் இருந்திற்று...

கோலங்களுக்காகவும், செல்விக்காகவும்
உறக்கத்தை தள்ளிப்போட்ட மனைவிமார்களும்
பேய்கூட பாய் போட்டுறங்கும் வேளையில்
பணிமுடிந்து திரும்பும் கணவன்மார்களும்
நிறைந்த இக்காலத்தேயும்
பனிக்காலம் இருக்கத்தான் செய்கிறது...

பனி அதிகமாகவில்லை
மனிதா
உன் பணி தான் அதிகமாகிவிட்டது...
Car'இனில் செல்கையில்
கடும்பனியையும் காலமாற்றங்களையும் கடிபவனே
கவலை கொள்ளாதே!
ஓசோனில் ஓட்டைபோட தெரிந்த உனக்கு
இது எம்மாத்திரம்...
இமாலயம் உருகுகிறது இங்கே
எரிமலைகள் வெடிக்கிறது அங்கே
உன் கைங்கர்யங்களில் நொடிந்து போன
இயற்கை குழந்தையின்
கோபமும் தாபமும் தான் அது...

என்னடா, இயற்கையெனில் அன்னை தானே?
ஏது குழந்தையென வியக்காதே!
அன்னை தான் மறித்து
பல மாமாங்கம் ஆயிற்றே...
குழந்தையின் குரல்வளையை
நசுக்கத் தான்
இங்கே போராட்டம் நடக்கிறது...

காலங்களை குற்றஞ் சொல்லாதே!
மானுடகாலமே காலமாகிக் கொண்டிருப்பதை உணர்..
வாழ்க மானுடம், வாழும் காலம் வரை,
பாவம் இயற்கை, பாழும் காலம் வரை...

Thursday, 3 December 2009

என் தந்தையின் பார்வையில்...


மறந்தும் கூட எடுத்துவிடாமல்
தெரிந்தே மறந்துவிட்டு சென்ற
என் மூக்கு கண்ணாடியை
எடுத்து வரும்படி
வாசலில் இருந்து பணித்தேன்...
"உங்களுக்கு எப்பவும் இதே வேலை,
எப்படித் தான் மறந்து போவீங்களோ?" என
செல்லமாய் சிணுங்கிக் கொண்டே
உள்ளிருந்து வரும் உனக்கு
புன்னகையை பதிலாய் வழங்கி
கண்ணாடியை வாங்கி
சட்டைப் பையில் வைத்துவிட்டு
இடப்பக்க கண்ணாடியில்
உதட்டை சுழித்து வழியனுப்பும்
உன் பிம்பத்தை
பார்த்து விட்டு செல்லும்
அந்த நாட்கள் மட்டுமே
இனிதாய் கழிகின்றன எனக்கு...
இதை எப்படி புரிய வைப்பேன்
என் ஞாபகமறதியை
குற்றஞ் சொல்லும்
நம் மகனிடம்...

Wednesday, 11 November 2009

நானும், நீயும், மழையும்...

நேற்று நள்ளிரவில் கலைஞர் தொலைக்காட்சி செய்த பெரும்பிழை தொடர்ந்து ஐம்பது (குறைந்த பட்சம்) மழைப் பாடல்கள் ஒளிபரப்பியது தான். அத்தனைப் பாடல்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் பொழுது மழைப் பெண்ணை பற்றி எழுதாமல் உறக்கம் எங்ஙனம் வரும்? இதோ அந்தக் கவிதை...



வானம் கறுத்து மழை வரத்துவங்கும்
அந்நேரங்களில்
உன் முகமும் கறுத்துப் போகும்...
எனக்கும் உனக்கும் இடையே
இவளொருத்தி வந்துவிட்டாளே
என புகைவாய் உள்ளுக்குள்..
குடையும் மழையங்கிகள்  வீட்டில் இருந்தும்
'எடுத்து வர மறந்து விட்டேனே'
என்பேன் நான்,
உன் சிறிய குடையில்
இருவரும் ஒன்றாய் நடக்கும்
அந்த இனிய தருணங்களுக்காக..

இருவரது முதுகுகளிலும் மழைநீர்
சொட்ட சொட்ட
முன்னந்தலைகளை முட்டிக் கொண்டு
மெல்ல ஊர்ந்து செல்வோம்
சென்னை சாலைகளில்...
காதலர்களை கண்டோ என்னவோ
கார்கள் கூட ஒதுங்கிச் செல்லும்
சேற்றினை வாரி இறைக்காமல்...

மழைப் பெண்ணின் மேல்
நீ கொண்ட கோபத்தை
மேலும் கூட்ட வேண்டுமென்றே
குடைக்கு வெளியில் செல்வேன் நான்.
'அச்சோ! உள்ள வாங்க'
என்று என்னை இழுத்தணைத்து
குடையினுள் கொண்டு வருவாய்...
அந்த சில நேரங்களில் மட்டும்
மழையை மெச்சுவாய் நீ,
கடவுளை மேச்சுவேன் நான்...

சண்டை சமாதனம் ஆயிற்று
என நினைப்பதற்குள்
ஒரு தும்மல்
தும்மி விடுவேன் நான்...
'இந்தா பிடி, என் சாபம்'
என மழையை வைதுவிட்டு
வீட்டினுள் நுழைந்தவுடன்
காபி போட சென்று விடுவாய் நீ...

உடை மாற்றி, தலை துவட்டி
இன்னும் ஈரமாகவே சமையலறையில்
மும்முரமாய் இருக்கும் உன்னை
பின்னால் வந்து
கட்டி அணைப்பேன் நான்!
'அடப் பாவிகளா!
மொத்தத்தில்
உங்கள் காதல் போதைக்கு
நான் ஊறுகாயா?'
என புலம்பல் கேட்கும்
சமையலறை ஜன்னலில் பட்டுத்தெறித்த
மழைத்துளியிடம் இருந்து...